This Article is From Dec 03, 2019

5 மாதங்களில் 2 மாநிலங்களை கடந்து 1,300 கி.மீ. நடைபயணம் சென்ற புலி!!

தனது பயணத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்கள், வயல் வெளிகளை புலி கடந்துள்ளது. இருப்பினும் ஒரேயொரு சம்பவத்தை தவிர்த்து மனிதர்களை தாக்கியதாக புலியின் மீது புகார் ஏதும் வரவில்லை.

5 மாதங்களில் 2 மாநிலங்களை கடந்து 1,300 கி.மீ. நடைபயணம் சென்ற புலி!!

1300 கிலோ மீட்டர் நடைபயணம் சென்ற புலி.

மகராஷ்டிராவில் தீபேஸ்வர் உயிரியல் பூங்காவை சேர்ந்த புலி ஒன்று (புலியின் எண் TWLS T1 C1) மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை கடந்து 1300 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் சென்றுள்ளது. புலியின் பயணம் குறித்த காரணங்களை உயிரியல் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

மகாராஷ்டிர மாநிலம் தீபேஸ்வர் உயிரியல் பூங்காவில் கடந்த 2016-ல் குட்டிப் புலி ஒன்று பிறந்தது. அந்த நேரத்தில் தாய்ப்புலிக்கு மொத்தம் 3 குட்டிகள் பிறந்தன. அவற்றுக்கு முறையே, T1 C1, T1 C2, T1 C3 என பூங்கா நிர்வாகிகள் பெயர் வைத்தனர்.

நன்றாக வளர்ந்து வந்த மூத்த புலியான T1 C1, கடந்த ஜூன் மாதத்தின்போது தீபேஸ்வர் உயிரியல் பூங்காவில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டது. 

.

இந்த தீபேஸ்வர் பூங்கா மகாராஷ்டிராவின் யவாத்மால் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. அங்கிருந்து புறப்பட்ட புலி, காடு, மலைகள், கிராமங்கள், வயல்வெளிகளைக் கடந்து பக்கத்து மாநிலமான தெலங்கானாவுக்கு சென்றுள்ளது. 

தெலங்கானாவின் பந்தர்கவ்டா பகுதியில் சிறிது காலம் தங்கியிருந்த புலி, மீண்டும் தனது பயணத்தை தொடங்கி, கடைசியாக மகாராஷ்டிராவின் தியான கங்கா வனப்பகுதியை வந்தடைந்துள்ளது.

கடந்த 5 மாதங்களில் மட்டும் இந்தப்புலி மொத்தம் 1300 கிலோ மீட்டரை கடந்து பயணம் சென்றுள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தனது பயணத்தின்போது ஒரேயொரு முறை மட்டும் ஹிங்கோலி மாவட்டத்தில் மனிதர்களை புலி தாக்கியுள்ளது. அதனை மனிதர்கள் மிகவும் நெருங்கியதால் வேறு வழியின்றி இந்த தாக்குதலை புலி நடத்தியுள்ளது. 

ரேடியோ அலைவரிசையின் மூலமாக புலியின் இயக்கம் கண்காணிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த நெடும் பயணத்தை புலி மேற்கொண்டது என்பது குறித்து உயிரியல் வல்லுனர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.