“ஆட்சியாளர்களுக்கும் கொரோனாவுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்”- டாஸ்மாக் திறப்பு பற்றி திருமா!!

"ஒரே இடத்தில் கும்பல் கூடுவதற்குத்தானே இது வழிவகுக்கும்? கொரோனாவுக்குத்தானே இது குதூகலம் அளிக்கும்?"

“ஆட்சியாளர்களுக்கும் கொரோனாவுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்”- டாஸ்மாக் திறப்பு பற்றி திருமா!!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா பரவலால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன
  • மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு என அரசு அறிவிப்பு
  • டாஸ்மாக் கடைகள் திறப்பிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது

மே 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். 

அவர், “மே- 07 ஆம் தேதிமுதல் மதுக்கடைகளைத் திறக்கப்போவதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மதுக்கடைகளைத் திறந்துவிட்டார்களாம். அதனால் தமிழக எல்லையோரங்களில் உள்ளவர்கள் அந்த மாநிலங்களுக்குச் செல்கிறார்களாம்; அவ்வாறு அண்டை மாநிலங்களுக்குக் கும்பல் கும்பலாகச் செல்வது கொரோனா தொற்றுக்கு வழிவகுத்து விடுமாம்; ஆகவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் தமிழகத்திலும் திறக்க முடிவெடுத்துள்ளனராம்! மக்கள் மீதுள்ள அக்கறையை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது தமிழக அரசு என்பதைப் பாருங்கள்?

தமிழக அரசின் கருத்துப்படி, எல்லையோர மாவட்டங்களச் சார்ந்தவர்கள்தானே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்குப் போகிறார்கள்? அப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் ஏன் மதுக்கடைகளைத் திறக்கவேண்டும்? தமிழகத்தின் 38 மாவட்டங்களுமா அந்த இரு மாநிலங்களின் எல்லையோரத்தில் உள்ளன?

கடுமையான நிபந்தனைகளுடன்தான் மதுக்கடைகள் திறக்கப்படுமாம். ஒரேநேரத்தில் ஐந்துபேருக்கு மட்டும்தான் கடையில் அனுமதியாம்; மூன்று அடி இடைவெளிவிட்டு ஒவ்வொருவரும் நிற்க வேண்டுமாம்! இதைவிட மக்கள் மீதுள்ள அக்கறையை எங்ஙனம் வெளிப்படுத்த இயலும்? தமிழக அரசின் இந்தப் பொறுப்புணர்வைப் பாராட்டித்தான் ஆகவேண்டும் !?

காவலர்கள் நிறையபேரைப் பணிக்கு அமர்த்திக் கடைகளுக்கு வருகிறவர்களை ஒழுங்குப்படுத்தும் அரசு என்றும்; காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, கொரோனாத் தொற்றுக்கு வாய்ப்பே இல்லை என அரசு உறுதி அளிப்பதாகவே தெரிகிறது. ஒருவேளை, மதுக் கடைகளில் பணியாற்ற வரும் காவலர்களையோ, மதுபானம் வாங்க வரும் மற்றவர்களையோ கொரோனா தீண்டாமல் இருக்க, ஆட்சியாளர்களுக்கும் கொரோனாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்திருக்குமோ?

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடைகள் மூடப்பட்டிருந்ததால் குடிப்பழக்கம் உள்ளவர்கள் கடைகளைத் திறக்கச் சொல்லி மறியல் போராட்டத்திலா ஈடுபட்டார்கள்? சட்டம் ஒழுங்கையா சீர்குலைத்தார்கள்? அரசு சாராயம் இல்லாததால் கள்ளச்சாராயம் பெருகி அதனால் குடியாளர்கள் கொத்துக் கொத்தாக மாண்டா போனார்கள்?

அப்படி என்ன தேவை எழுந்தது? ஒரே இடத்தில் கும்பல் கூடுவதற்குத்தானே இது வழிவகுக்கும்? கொரோனாவுக்குத்தானே இது குதூகலம் அளிக்கும்?

கும்பல் கூடாதே என்று பரப்புரை ஒருபுறம்; கும்பல் கூடுவதற்கு வழிவகுப்பது இன்னொருபுறம். முன்னுக்குப்பின் எவ்வளவு பெரிய முரண்பாடு இது? எவ்வளவு மோசமான மக்கள்விரோத போக்கு இது? எவ்வளவு குரூரமான மக்கள் துரோகம் இது? கொரோனா நேரத்தில் தமிழக அரசின் இந்த முடிவு 'குடிகெடுக்கும் கொடிய முடிவு'!” என்று விரிவான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.