கொரோனா ஏற்படுத்திய மாற்றம்! கயிறு மூலம் உணவை சப்ளை செய்யும் வித்தியாசமான ரெஸ்டாரன்ட்

சமையல் அறையில் இருந்து உணவு நேராக டைனிங் டேபிளுக்கு உணவு கயிறு மூலம் கொண்டு செல்லப்படுகிறது. கொரோனா இன்னும் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை.

கொரோனா ஏற்படுத்திய மாற்றம்! கயிறு மூலம் உணவை சப்ளை செய்யும் வித்தியாசமான ரெஸ்டாரன்ட்

ஒரு டைனிங் டேபிளில் ஒரேயொரு நபருக்கு மட்டும்தான் உணவு பரிமாறப்படும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் எண்ண முடியாத அளவுக்கு மக்கள் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பது கொரோனாவை தடுப்பதற்கான முக்கிய வழிமுறை. அந்த வகையில், ஸ்வீடன் நாட்டில் வித்தியாசமான உணவகம் ஒன்று செயல்படவுள்ளது.

வார்ம்லேண்டின் லூஷ் மிடோவில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் எந்த கட்டிடமும் இல்லாத வெட்டவெளியில் இதனை அதன் உரிமையாளர்களான லிண்டா மற்றும் ராஸ்மஸ் ஆகியோர் ஏற்படுத்தியுள்ளனர். 

மே 10-ம்தேதி முதல் உணவகம் செயல்படவுள்ளது. இதற்கு 'போர்டு ஃபார் இன்' என்று பெயர் வைத்துள்ளனர். அதற்கு ஒருவருக்கு மட்டுமே டைனிங் டேபிள் என்று அர்த்தமாம்.
 

இதுகுறித்து உரிமையாளர் லிண்டா கூறுகையில், 'எல்லோரும் பலன் அடையும் வகையில் இந்த உணவகத்தை ஏற்படுத்தி உள்ளோம். உலகிலேயே கொரோனா பாதிப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் உணவகம் இதுவாகத்தான் இருக்கும். 

ஒருவர் மட்டுமே அமரும் வகையில் டைனிங் டேபிள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கயிறு மூலம் சமையல் அறையில் இருந்து சமைக்கப்பட்ட உணவு நேராக டைனிங் டேபிளுக்கு வந்து விடும். 

இங்கு வந்து சாப்பிடும் யாருக்கும் கொரோனா பாதிப்பு வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். சாப்பிட பணம் இல்லாதவர்களும் இங்கு வரலாம். 

நாம் மிக மோசமான சூழலை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதிகமானோர் தங்களது வேலைகளை, தங்களுக்கு பிரியமானவர்களை இழந்து தவிக்கின்றனர். உங்களிடம் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் உணவகத்திற்கு வாருங்கள். இயன்றவரை உங்களுக்கு உணவு அளிக்கிறோம்' என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்வீடனில் நிலைமையை திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் பள்ளிகள், உணவகங்கள், மதுக்கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது.