This Article is From Feb 15, 2019

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை! - வனத்துறை அறிவிப்பு

கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வந்த யானை சின்னத்தம்பி இன்று வனத்துறையின் பொறியில் சிக்கியது. அதனை ரகளியாறு யானைகள் முகாமுக்கு வனத்துறையினர் அனுப்பியுள்ளனர்.

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை! - வனத்துறை அறிவிப்பு

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் போக்குக் காட்டி வந்த யானை சின்னத்தம்பியை மயக்க ஊசி செலுத்தி, கும்கிகளின் உதவியோடு வனத்துறையினர் பத்திரமாக பிடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த யானை சின்னத்தம்பியை பிடிக்க நேற்று முதல் வனத்துறையினர் ஆயத்தமாகி இருந்தனர். சுமார் 70-க்கும் அதிகமான வனத்துறையினரும், மருத்துவக்குழுவினரும் யானையை பிடிக்க வியூகம் வகுத்தனர். நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், யானை வெளியே வராததால் அந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 8 மணியளவில் சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இந்த ஊசி யானையின் கால் பகுதியில் பாய்ந்தது. பின்னர் வாழைத் தோட்டத்திற்குள் சின்னத்தம்பி சென்றது. பின்னர் கும்கி சுயம்பு, கலீல் ஆகியவற்றின் மூலம் தோட்டத்திலிருந்து யானை வெளியே கொண்டுவரப்பட்டு அதைத் தொடர்ந்து மயக்க ஊசிகள் துப்பாக்கி மூலம் செலுத்தப்பட்டன.

இதையடுத்து சின்னத்தம்பி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனை ரகளியாறு யானைகள் முகாமுக்கு வனத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் ஏதும் இல்லை என்றும், வனத்தில் இருந்து வந்த யானையை பத்திரமாக வனத்திற்கு திருப்பி கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தங்களின் நோக்கம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

.