This Article is From Nov 18, 2019

தமிழகத்தில் நிச்சயமாக அரசியல் வெற்றிடம் உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

தமிழகத்தில் நிச்சயமாக அரசியல் வெற்றிடம் உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நிச்சயமாக அரசியல் வெற்றிடம் உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நிச்சயமாக அரசியல் வெற்றிடம் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, தமிழகத்தில் ஆளுமைமிக்க அரசியல் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் கருத்திற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. ரஜினி சொல்வது போல் அரசியலில் வெற்றிடம் என எதுவும் இல்லை. ரஜினி என்ன அரசியல் தலைவரா? அவர் ஒரு நடிகர். அவர் சொல்வதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன" என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இதற்கு பதிலடியாக, முதல்வர் எடப்பாடியை சீண்டும் வகையில் நேற்றைய தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 

தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றுக் கூறி மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நிச்சயமாக அரசியல் வெற்றிடம் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஒரு எம்.ஜி.ஆருக்கு நிகராக, ஜெயலலிதாவுக்கு நிகராக, கருணாநிதிக்கு நிகராக, காமராஜருக்கு நிகராக, அண்ணாவுக்கு நிகரான தலைவர்கள் இன்று இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.   

தலைவர்கள் இருக்கிறார்கள், பல்வேறு பொறுப்புகளில் இருக்க முடியும். ஆனால், அந்த தலைமை பண்போடுக் கூடிய, ஆளுமையான தலைவர்கள் இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.  

.