என்னவாகும் ரஃபேல் விவகாரம்; உச்ச நீதிமன்றம் இன்று முடிவு: 10 ஃபேக்ட்ஸ்!

ஊடகங்களில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான பல ரகசிய ஆவணங்கள் கசிந்தன.

என்னவாகும் ரஃபேல் விவகாரம்; உச்ச நீதிமன்றம் இன்று முடிவு: 10 ஃபேக்ட்ஸ்!

ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான ரகசிய ஆவணங்கள் கசிந்ததை அடுத்து, மத்திய அரசு, ‘தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது’ என்று கூறியுள்ளது. 

New Delhi:

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம், மத்திய அரசுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அடுத்து, ஊடகங்களில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான பல ரகசிய ஆவணங்கள் கசிந்தன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தலாமா வேண்டாமா என்பதை உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்ய உள்ளது. ‘தி இந்து' ஆங்கில செய்தித் தாளில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான பல ரகசிய ஆவணங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த ஆவணங்களின் அடிப்படையில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மறு விசாரணை தேவை என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 

10 ஃபேக்ட்ஸ்:

1.மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா மறும் அருண் ஷோரி ஆகியோர்தான், ரஃபேல் விவகாரத்தில் மறு விசாரணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். பூஷன், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரணை கோரி வருகிறார். 

2.ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான ரகசிய ஆவணங்கள் கசிந்ததை அடுத்து, மத்திய அரசு, ‘தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது' என்று கூறியுள்ளது. 

3.இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூஷன், ‘ஒரு உண்மையை பறைசாற்றும் வகையில் ஆவணம் இருந்தால், அது எப்படி பெறப்பட்டது என்பது முக்கியமல்ல' என்று பதில் வாதம் வைத்தார். 

4.ரஃபேல் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட்டது குறித்து இந்து குழும தலைவர் என்.ராம், ‘பொது நலன் கருதிதான் நாங்கள் ஆவணங்களை வெளியிட்டோம். அது எங்கிருந்து எங்களுக்குக் கிடைத்தது என்பதை சொல்ல மாட்டோம்' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

5.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, ‘மத்திய அரசு, இந்த ஆவணங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சொன்னாலும், ஆர்.டி.ஐ சட்டத்துக்குக் கீழ் அதில் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை' என்று கருத்து கூறியது. 

6.முன்னதாக 36 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கு இந்திய அரசு, தேவைக்கு அதிகமான தொகை ஒதுக்கியது என்றும், அனில் அம்பானிக்கு உதவி செய்யும் நோக்கில் நடந்து கொண்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். 

7.தி இந்து வெளியிட்ட ஒரு ஆவணத்தில், ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ராணுவத் துறை அமைச்சகம் ஒரு புறம் பேசிவந்தபோதும், பிரதமர் அலுவலகம் இன்னொரு புறம் பேசிவந்தது. இப்படிச் செய்ததால், இந்தியாவுக்கு பாதகமாக ஒப்பந்தம் அமைந்தது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

8.காங்கிரஸ் தரப்பு, ‘நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மிக அதிக தொகைக்கு 36 ரஃபேல் விமானங்களை ஒப்பந்தம் செய்து, நாட்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது' என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. 

9.அதேபோல மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸை ரஃபேல் ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. 

10.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று காங்கிரஸ், தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பொறுப்புத்துறப்பு: ரஃபேல் ஒப்பந்தம் குறித்து NDTV செய்தி வெளியிடுவதால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 10,000 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.