குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழிலாளர்களின் 50% ஊதியத்தை அரசே வழங்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்

ஊரடங்கிற்குப் பிறகு இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு 30 சதவீத மானியக் கடன்கள் வழங்கிட வேண்டும். அதற்கு வட்டி வசூல் செய்வதை 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும்.

குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழிலாளர்களின் 50% ஊதியத்தை அரசே வழங்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்

குறு, சிறு, நடுத்தர நிறுவன தொழிலாளர்களின் 50% ஊதியத்தை அரசே வழங்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களின் 50% ஊதியத்தை அரசே வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய கேந்திரங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர், கோவை, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இயங்கும் இந்த நிறுவனங்கள், ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்று அடுத்தடுத்து சோதனைகளைச் சந்தித்து, தற்போது கொரோனா நோய் பேரிடரைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக முற்றிலும் நிலை குலைந்து நிற்கின்றன.

இந்நிலையில், இன்றைய தினம் மாநிலம் முழுவதும் உள்ள இந்தத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த கூட்டமைப்புத் தலைவர்கள், மற்றும் பிரதிநிதிகளுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடி - அவர்கள் சந்திக்கும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் குறித்தும் - பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தேன்.

இந்த நிறுவனங்களின் சார்பாகப் பங்கேற்ற ஒவ்வொரு பிரதிநிதியும் எடுத்து வைத்த கருத்துகள், ஆலோசனைகள், கோரிக்கைகள் மூலம், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர்க்கு நேரடியாகவும், அதற்கு மேலும் பல லட்சம் பேருக்கு மறைமுகமாகவும், வேலை வாய்ப்பையும் - வாழ்வாதாரத்தையும் வழங்கும் இந்தத் துறை தற்போது எத்தகையை பேரிடரில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது.

இதனால், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் “ஊரடங்கு” என்ற மூச்சுத்திணறலில் இருந்து மீண்டு - தொழில்களைத் தொடங்கிடவும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை மீண்டும் தொய்வின்றி வழங்கிடவும், பின்வரும் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாகப் பரிசீலனை செய்து நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தொழிலை மீண்டும் தொடங்கவும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் இந்த நிறுவனங்களின் நடைமுறை மூலதனம் மற்றும் ரொக்கக் கடன் வழங்கும் வரம்பை 25 சதவீதம் உயர்த்தி, குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.

மின்கட்டணம், தண்ணீர்க் கட்டணம், மற்றும் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்துவதை ஆறு மாதங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்; இந்த சேவைகளுக்கான வைப்புத் தொகையையும் குறைக்க வேண்டும். 

ஆறு மாதங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூலைத் தள்ளிவைப்பதோடு - அந்த பாக்கியை இரு வருடங்களில் மாத தவணையில் செலுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

ஊரடங்கிற்குப் பிறகு இந்த நிறுவனங்கள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு 30 சதவீத மானியக் கடன்கள் வழங்கிட வேண்டும். அதற்கு வட்டி வசூல் செய்வதை 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும்.

தொழிலாளர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தைத் தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) மூலம் மத்திய அரசு வழங்கிட வேண்டும். 

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதியும் - ஊரடங்கு தளர்வுகளினால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொய்வின்றிச் செயல்பட்டிடவும் எவ்விதத் தயக்கமும் தாமதமுமின்றி இந்தக் கோரிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் தவறாது நிறைவேற்றிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.