கடன் சுமை உயர்வு: படுபாதாளத்தை நோக்கி செல்லும் தமிழகத்தின் நிதி நிலைமை: கே.எஸ்.அழகிரி

இத்தகைய மோசமான நிதிநிலையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

கடன் சுமை உயர்வு: படுபாதாளத்தை நோக்கி செல்லும் தமிழகத்தின் நிதி நிலைமை: கே.எஸ்.அழகிரி

அதிமுக அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்று கொண்டிருக்கிறது - கே.எஸ்.அழகிரி

2018-19-ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக உயர்ந்து, தமிழகத்தின் நிதி நிலைமை படுபாதாளத்தை நோக்கி செல்கிறது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு தற்போது நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக போட்டியிடுகிற காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

இப்படி வெற்றி பெறுவதன் மூலமே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படுவதோடு, மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட உரிய வாய்ப்பு கிடைக்கும். அதிமுகவினரைப் பொறுத்தவரை பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு அவை எவற்றையும் நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை.

தமிழகத்தை ஆளுகிற அதிமுக அரசு, மத்திய அரசிடம் உரிமைகளைப் போராடிப் பெறுவற்கு துணிவற்ற நிலையில் இருக்கிறது. கடந்த 2015 முதல் 2018 வரை இயற்கை சீற்றங்களால் வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய பாஜக அரசிடம் தமிழக அரசு நான்கு தவணைகளில் கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி ஆகும்.

இதில் நரேந்திர மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியது வெறும் ரூபாய் 3,700 கோடி மட்டுமே ஆகும். இதன்மூலம் மோடி அரசு தமிழகத்தை எந்த அளவுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வஞ்சிக்கிறது என்பதற்கு வேறு புள்ளி விவரங்கள் தேவையில்லை.

இன்றைய அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் 2018-19 இல் அது ரூபாய் 3 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல தமிழக மின் வாரியத்தின் கடன் சுமை ரூபாய் 1 லட்சம் கோடியாக எட்டியுள்ளது.

மேலும் மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ரூபாய் 2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய மோசமான நிதிநிலையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட நிதி நிலைமையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்கோ, வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கோ எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் அதிமுக அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால், இனி எஞ்சியிருக்கிற ஆட்சிக் காலத்தில் அதிமுக ஆட்சியினால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

More News