This Article is From May 25, 2019

எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம்: ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!

எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம்: ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!

இதுகுறித்து இன்று அவர் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது,

வரலாற்றுச் சிறப்புமிக்க - நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள். 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களைக் கழகம் கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் திமுக பெறுகிறது. 1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது. 

சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது. அதிமுக.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் திமுக கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும். நமக்கான பெரும்பணிகள் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றன.

மக்கள் நம் மீது அசையா நம்பிக்கை வைத்து அளித்துள்ள இந்த மகத்தான வெற்றிகளுக்காகச் சூட்டப்படும் புகழ் மாலைகள் அனைத்தும்,நம்மை நாளும் வளர்த்தெடுத்து - நல்ல வழிகாட்டி -குறைவின்றி நெறிப்படுத்திய தலைவர் கலைஞருக்கு உரியவை. அவரிடம் நான் கற்றுக்கொண்டது, உழைப்பு, ஓயாத உழைப்பு. 

தலைவர் கலைஞர் இல்லாத நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகவும்-கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் -வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயகரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப் பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது. 

தேர்தல் களத்தின் வெற்றியுடன் நிறைவுகொள்பவர்கள் நாமல்ல. நம்மை அப்படி தலைவர் கலைஞர் உருவாக்கவும் இல்லை. எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு,நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. 

இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது. அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.

இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் கண்ட இனம்-மொழிக்கான கனவு நனவாகும் காலம் நெருங்கி வருகிறது. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் திமுகவின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

.