This Article is From Jun 07, 2019

பாஜகவுக்கு எதிராக அணிதிரண்ட, மாநில கட்சிகளின் தோல்வி வருத்தத்தை அளிக்கிறது: ப.சிதம்பரம்

பாஜகவுக்கு எதிராக தனி தனியாக அணிதிரண்ட மாநில கட்சிகள் தோல்வியடைந்தது வருத்தத்தை அளிக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக அணிதிரண்ட, மாநில கட்சிகளின் தோல்வி வருத்தத்தை அளிக்கிறது: ப.சிதம்பரம்

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில், 352 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் கூட்டணியோ 90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், பாஜகவுக்கு எதிராக அணிதிரண்டு தனித்துப்போட்டியிட்ட பல மாநிலக் கட்சிகளும் கடும் தோல்வியை சந்தித்தது. உத்தர பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் கூட்டணி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என பலரும் தோல்வியுற்றனர்.

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் கடும் தோல்வியை சந்தித்தது.

இதில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உட்பட 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு, எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை விட பெறும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றதை அடுத்து, காரைக்குடியில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததும் தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் ஒரு மிகப்பெரிய திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என நினைத்தோம், அது முடியவில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.

.