This Article is From Dec 18, 2018

ஜெயலலிதா சகிச்சையின் போது உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடியாம்: அப்பல்லோ தகவல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது

ஜெயலலிதா சகிச்சையின் போது உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடியாம்: அப்பல்லோ தகவல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 75 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும், மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவின் உறவினர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில், 75 நாட்கள் அப்பல்லோவில் தங்கியிருந்த ஜெயலலிதாவுக்கு உணவு அளிக்க ரூ.1.17 கோடி செலவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் உணவு வழங்கியதற்கு ஆன செலவு ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் ஆகும்.

மேலும், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சைக்கு அதாவது மருத்துவச் செலவு ரூ.6.85 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ரூ.92.7 லட்சமும், அறை வாடகைக்கு ரூ.24.19 லட்சமும், பிசியோதெரபி சிசிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடியும் செலவிடப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கான மொத்த செலவுத் தொகையில் இதுவரை ரூ.6.41 கோடி காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.44.56 லட்சம் பாக்கித் தொகை வழங்க வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

.