கர்நாடகத்தில் நீடிக்குமா குமாரசாமி அரசு? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

ஆளும் இந்த இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்பது இன்று தெரிந்துவிடும்.

Bengaluru:

கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. ஆளும் இந்த இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் வழங்கியுள்ளனர். எனினும், இந்த ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகர் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரினார். இதைத்தொடர்ந்து, வரும் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்' என்று தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 12-ந் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது 16-ந் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

மேலும், ராஜினாமா கடிதத்தை ஏற்க குறிப்பிட்ட கால அவகாசம் எதனையும் நிர்ணயிக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது அதிருப்தி எம்.எல்.ஏக்களின் விருப்பம் என்றும் அவர்களை கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsbeep

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் மொத்தம் உள்ள 224 உறுப்பினர்களும் ஆஜராகி இருந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது.

இதனிடையே, இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், கலந்து கொள்ளப் போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் அறிவித்து விட்டனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது எனக் கூறப்படுகிறது. எனவே அவரது தலைமையிலான காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்பது இன்று தெரிந்துவிடும்.