This Article is From Jul 18, 2019

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டு அறிவிப்பு!

விதி எண் 110-ன் கீழ் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

தமிகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த ஜன.8ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதாலும், மாவட்டங்களில் அதிக ஊராட்சி ஒன்றியங்களை கொண்டதில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்றாக இருப்பதாலும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி, நீண்ட நாட்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தென்காசி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது. இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டை தனி மாவட்டமாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நெல்லை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக இரண்டு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

.