This Article is From Dec 02, 2019

பெண்களுக்கு இரவு நேர பணி வேண்டாம்: தெலுங்கானா முதல்வர் சர்ச்சை கருத்து

அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து துறையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்று கூறியுள்ளார்.

பெண்களுக்கு இரவு நேர பணி வேண்டாம்: தெலுங்கானா முதல்வர் சர்ச்சை கருத்து

ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து போக்குவரத்து ஊழியர்களுடன் உரையாற்றும் போது இதனை கூறியுள்ளார்.

Hyderabad:

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து துறையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. 

பெண் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், அது மனிதாபிமானமற்றது என்று குறிப்பிட்டார். 

பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மனிதர்களே இல்லை, அவர்கள் மிருகங்கள். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து துறையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்று கூறியுள்ளார். 

ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து போக்குவரத்து ஊழியர்களுடன் உரையாற்றும் போது இதனை கூறியுள்ளார். 55 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் அண்மையில் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

முதல்வரின் இந்த கருத்தை தொடர்ந்து, தகவல்தொழில்நுட்பத் துறை உட்பட பல துறைகளில் உள்ள பெண் ஊழியர்கள் பெரும்பாலும் பெண்களுக்கான இரவு பணியிடங்களை நீக்குவது பிற்போக்குத்தனமானது என்று கூறியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் பணியிடங்களில் பெண்களுக்கான இடத்தை மேலும் சுருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

கடந்த புதன்கிழமையன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.  

இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. 

இதையடுத்து போலீசாரின் விசாரணையில், நவ.,27 அன்று இரவு அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அதிகாலை 2.30 மணிக்கு அப்பெண் தீவைத்து எரிக்கப்பட்டதும் முதல்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

.