This Article is From Dec 08, 2019

‘பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்தால் இனி என்கவுன்ட்டர்தான் நடக்கும்’ – அமைச்சர் எச்சரிக்கை

குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் தெலசானி ஸ்ரீனிவாச யாதவ், இது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சந்திர சேகர ராவ் அரசு உறுதியுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

‘பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்தால் இனி என்கவுன்ட்டர்தான் நடக்கும்’ – அமைச்சர் எச்சரிக்கை

போலீசாரின் நடவடிக்கை என்பது பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்று தெலசானி ஸ்ரீனிவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Hyderabad:

பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்தால் இனி என்கவுன்ட்டர்தான் நடக்கும் என்று தெலங்கானா அமைச்சர் தெலசானி ஸ்ரீனிவாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர், யாரேனும் கொடூரமான குற்றச் செயல்களை செய்தால் அவர்கள் போலீஸ் என்கவுன்ட்டர் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெலங்கானாவின் கால்நடைத்துறை அமைச்சர் அமைச்சர் தெலசானி ஸ்ரீனிவாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஐதராபாத் என்கவுன்ட்டர் என்பது ஒரு நல்ல பாடம். நீங்கள் தவறு செய்தால், நீதிமன்ற விசாரணை, ஜாமீன், சிறை தண்டனை போன்ற எதிலிருந்தும் தப்பிக்க முடியாது. இனி அதுபோன்ற எதுவும் நடக்காது.

நீங்கள் கொடூரமான குற்றத்தை செய்தால் என்கவுன்ட்டரை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்ற எச்சரிக்கையை இந்த சம்பவத்தின் மூலமாக நாங்கள் விடுத்துள்ளோம்.

ஐதராபாத் என்கவுன்ட்டரை சில மனித உரிமை அமைப்புகள், நீதித்துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் கண்டித்துள்ளனர். ஆனால், இந்த நடவடிக்கை என்பது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சந்திர சேகர ராவின் அரசு உறுதியாக உள்ளதை காட்டுவதாக அமைந்துள்ளது. நாட்டிற்கே முன்மாதிரியான நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

எங்கள் நலத்திட்டமாக மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விஷயத்திலும் நாங்கள் நாட்டிற்கு முன்மாதிரியாக உள்ளோம். இந்த விஷயத்தில் சந்திர சேகர ராவை யாரும் குற்றம் சுமத்த முடியாது. ஏனென்றால் அவருக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத் என்கவுன்ட்டர் விவகாரத்தில் முதல்வர் சந்திர சேகர ராவ் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா போக்குவரத்து துறை அமைச்சர் அஜய் குமார் கூறுகையில், ‘விரைவான நீதியை வழங்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியான செயலை மாநில அரசு செய்திருக்கிறது. எங்கள் மகள்களை யாரேனும் கண்ணால் அச்சுறுத்த முயன்றால் அவர்கள் கண்களை பிடுங்கி விடுவோம். இந்த என்கவுன்ட்டர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைதியை ஏற்படுத்தும்' என்றார்.

என்கவுன்ட்டரை விமர்சித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதி எஸ்.ஏ. பாப்டே, நீதித்துறைக்கு அப்பாற்பட்டு உயிர்களைக் கொல்லுவது என்பது, பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பார்க்கப்படுகிறது. பழிக்குப் பழியாக சென்றுவிட்டால் நீதி தன்னுடைய குணத்தை இழந்து விடும் என்றுதான் நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பலர் இந்த என்கவுன்ட்டரை பாராட்டி கருத்துக் கூறியுள்ளனர்.

மற்றொரு தரப்பினரோ, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது நியாயத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க அவகாசம் வழங்கப்படவில்லை என்று விமர்சித்துள்ளனர்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த சைபராபாத் போலீஸ் கமிஷ்னர் வி.சி. சஜ்ஜனார், போலீசாரை கற்கள் மற்றும் தடியால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதை தொடர்ந்துதான் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறியுள்ளார்.

.