This Article is From Dec 06, 2019

தெலுங்கானா என்கவுன்டர்: 7 வருடமாக தினமும் செத்துக் கொண்டிருக்கிறோம்: நிர்பயா பெற்றோர்

Telangana encounter: தெலுங்கான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிர்பயாவின் தாய் ஆஷா, குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. காவல்துறையினர் ஒரு முன்னுதாரனமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

Telangana: குற்றவாளிகள் தப்பித்துச்செல்ல முயன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Hyderabad:

கடந்த 2012ல் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் பெற்றோர், கால்நடை பெண் மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு தெலுங்கானா காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில், எதிர்பாராத திருப்பமாக இந்த சம்பவத்திற்கு காரணமாக குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு, குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணி அளவில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். 

அப்போது, அதில் ஒருவர் தப்பித்துச்செல்ல மற்றவர்களுக்கு கண்காட்டியதாகவும், உடனடியாக அவர்கள் 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு அவர்களின் ஆயுதங்களை எடுத்து தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதனால், அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். 

இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக கால்நடை பெண் மருத்துவரின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இதற்காக காவல்துறை மற்றும் அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மகளின் ஆத்மா இப்போது சாந்தியடையும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த நவ.28ஆம் தேதியன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார். 

இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. இதனிடையே, அந்த பெண்ணிடம் உதவி செய்வது போல் நடித்து அவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண்ணை எரித்துக்கொலையும் செய்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 2012ல் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவி தெலுங்கானா சம்பவம் குறித்து கூறும்போது, குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நான் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். போலீசார் மிக நல்ல பணியை மேற்கொண்டுள்ளனர். 

4 பேரையும் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறையினர் மீது பயம் வர வேண்டும். இன்றைய நாளில் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தண்டனை அவசியப்படுகிறது. 

நான் 7 வருடங்களாக காத்திருக்கிறேன். ஒவ்வொரு நீதிமன்றமாக அழைந்துவருகிறேன். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறேன். ஆனால், நீதிமன்றமோ, அவர்களுக்கு மனித உரிமை உண்டு தூக்கிலிட முடியாது என்கிறது. ஆனால், இன்றைய தினம் இவை அவசியப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். 

இதேபோல், நிர்பயாவின் தந்தை கூறும்போது, இந்த என்கவுன்டர் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தினமும் செத்துக்கொண்டு இருக்கிறோம். தெலுங்கான பெண்ணின் பெற்றோருக்காவது, இந்த நிலை வேண்டாம்.. ஒருவேலை குற்றவாளிகள் தப்பித்துச்சென்றிருந்தால், தெலுங்கானா காவல்துறையினருக்கு மோசமான நிலை வந்திருக்கும். அவர்கள் ஒரு நல்ல வேலை செய்துள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார். 

.