''கோடிகளில் நன்கொடை பெற்றுத்தர பயன்படுத்தினார்கள்'' - நித்யானந்தா மீது சிறுமி புகார்!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது, 4 குழந்தைகளை கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.

''கோடிகளில் நன்கொடை பெற்றுத்தர பயன்படுத்தினார்கள்'' - நித்யானந்தா மீது சிறுமி புகார்!

நித்தியானந்தாவுக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.

Ahmedabad:

கோடிகளில் நன்கொடை பெற்றுத்தருவதற்காக பயன்படுத்தப்பட்டோம் என்றும், நித்தியானந்தா ஆசிரமத்தில் முறைகேடுகள் பல நடந்திருப்பதாகவும், அவரது ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட 15 வயது சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு சிறுமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

நான் ஆசிரமத்தில் கடந்த 2013-ல் சேர்ந்தேன். அப்போது நான் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டேன். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து ஆசிரமத்தில் முறைகேடுகள் நடக்கத் தொடங்கின. 

நாங்கள் ஆசிரமத்திற்காக நிதியைப் பெற்றுத்தருவதற்காக, நித்தியானந்தாவை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டோம். நன்கொடை என்றால் அவை ஆயிரங்களில் அல்ல. லட்சங்களில். ரூ. 3 லட்சம் முதல் ரூ. 8 கோடி ரூபாய் வரைக்கும் நன்கொடை பெற்றுத் தருவதற்கு நாங்கள் பயன்படுத்தப்பட்டோம். 

நன்கொடை ரொக்கமாக நாங்கள் பெறுவோம் அல்லது ஏக்கர் கணக்கில் நிலங்களை ஆசிரமத்தின் பெயருக்கு நன்கொடையாக மாற்றுவோம். நள்ளிரவில் என்னை எழுப்பி, நித்தியானந்தாவுக்காக வீடியோ செய்யச் சொல்வார்கள். நாங்கள் கனமான நகைகள், அதிகமான மேக்-அப்புகளை போட்டுக் கொள்வோம். எனது மூத்த சகோதரியால் ஆசிரமத்தை விட்டு வெளியேற முடியவில்லை. 

நித்தியானந்தாவின் நேரடி உத்தரவின்பேரில் எனது மூத்த சகோதரி வீடியோக்களை பதிவு செய்தார். இதனை நான் நேரில் பார்த்திருக்கிறேன். எனது தாய் மற்றும் தந்தையை தகாத வார்த்தையால் பேச வேண்டும் என்று என்னை நிர்பந்தித்தனர். நான் அதற்கு உடன்படவில்லை. 

இவ்வாறு அந்த சிறுமி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ள சிறுமியின் தந்தை, தனது மகள் ஆசிரமத்தில் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார். 

சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்யும் நடவடிக்கையில் குஜராத் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

More News