This Article is From May 26, 2020

“சந்திரபாபு நாயுடு குவாரன்டீன்ல இருக்கணும்!”- பிரமாண்ட வரவேற்பு; ஆந்திராவில் எழுந்த சிக்கல்!!

மார்ச் 22 ஆம் தேதி ஐதராபாத்திற்கு சென்றிருந்தார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • இரண்டு மாதங்கள் ஐதராபாத்தில் இருந்தார் சந்திரபாபு நாயுடு
  • ஆந்திரா வந்த நாயுடுவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது
  • இந்த செயலுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
Amaravati, Andhra Pradesh:

இந்தியாவில் உள்ளூர் விமான சேவை ஆரம்பித்துள்ள நிலையிலும் தெலங்கானாவிலிருந்து ஆந்திராவுக்கு சாலை மார்க்கமாக வந்துள்ளார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. ஐதராபாத்திலிருந்து அமராவதிக்கு அவர் வந்ததைத் தொடர்ந்து அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் நாயுடுவுக்கு பிரமாண்ட வரவேற்பைக் கொடுத்தனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகல் கடைபிடிக்கப்படாமல் இப்படி சந்திரபாபு நாயுடுவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் காடிகோடா ஸ்ரீகாந்த் ரெட்டி, “மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவுகளை மொத்த நாடும் பின்பற்றி வருகிறது. ஆனால் ஐதராபாத்திலிருந்து வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சமூக விலகல் நடைமுறைகளைக் கடைபிடிக்காமல் மலர் தூவி வரவேற்றுள்ளனர். அவரை வரவேற்றவர்கள் மாஸ்க் கூட போட்டிருக்கவில்லை. ஒரு மூத்த அரசியல் தலைவராக இருந்து கொண்டு அவரால் எப்படி இதைப் போன்ற காரியத்தில் ஈடுபட முடிகிறது?” என்று சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும், “சந்நிரபாபு நாயுடு, கொரோனா பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலத்திலிருந்து வந்துள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியலில் ஈடுபடுகிறார். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு வந்துள்ள அவர் கட்டாயம் குவாரடன்டீன் செய்யப்பட வேண்டும்,” என்றுள்ளார். 

மார்ச் 22 ஆம் தேதி ஐதராபாத்திற்கு சென்றிருந்தார் சந்திரபாபு நாயுடு. மார்ச் 24 ஆம் தேதி, தேசிய ஊரடங்கு உத்தரவு பற்றி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. 

சந்திர பாபு நாயுடு, பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஐதராபாத்திலிருந்து கறுப்பு டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் வந்துள்ளார் நாயுடு. அவருக்கான கான்வாய்களாக கிரே நிறத்தினாலான டாட்டா சஃபாரி கார்கள் வந்துள்ளன. இப்படி வருவது அவரது பாதுகாப்பைக் கேள்விக்குறியாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் முதல்வர் பாதுகாப்புக்கான அதிகாரி ஒருவர். 

கடந்த 2003 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் குழுக்களால் நாயுடு தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு Z-ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. 

தெலுங்கு தேசம் கட்சியின் வருடாந்திர கூட்டமான ‘டிடிபி மகாநாட்டில்' வீடியோ மூலம் நாளையும் நாளை மறுநாளும் கலந்து கொள்கிறார் நாயுடு. அதைத் தொடர்ந்து எல்ஜி பாலிமர் விஷவாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க விசாகப்பட்டினம் செல்கிறார். 

(With inputs from ANI) 
 

.