This Article is From Jan 23, 2019

“சோழர் காலத்திலிருந்தே தமிழர்கள் வர்த்தகத்தில் வல்லவர்கள்!”- நிர்மலா சீதாராமன் பெருமிதம்

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.

“சோழர் காலத்திலிருந்தே தமிழர்கள் வர்த்தகத்தில் வல்லவர்கள்!”- நிர்மலா சீதாராமன் பெருமிதம்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஹைலைட்ஸ்

  • இன்று 2வது முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது
  • இன்றும் நாளையும் மாநாடு நடைபெறும்
  • முதல்வர் பழனிசாமி மாநாட்டைத் துவங்கி வைத்தார்

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று பிரமாண்டமான முறையில் தொடங்கியுள்ளது. மாநாட்டில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்நிர்மலா சீதாராமன், “சோழர் காலத்திலிருந்தே தமிழர்கள் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள்” என்று நெகிழ்ச்சியாக உரையாற்றினார். 

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அம்மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்க 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். நிறைவு நாள் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளார். மொத்தமாக 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டின் தொடக்க நாளான இன்று பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்தில் தொழில் துறை மற்றும் வர்த்தகம் என்பது கடந்த சில ஆண்டுகளிலோ, கடந்த சில பத்தாண்டு காலகட்டத்திலோ வளர்ந்துவிட்டதாக மட்டும் பார்க்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களே, உலகளாவிய அளவில் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தனர். 

குறிப்பாக கிழக்காசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் போன்றவற்றில் சென்று பார்த்தல் தமிழர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அங்கிருக்கும் கட்டடங்கள் மற்றும் வர்த்தகம் செய்யும் இடங்களில் தமிழர்களின் எச்சம் இன்னும் இருக்கிறது. சோழர் காலத்து வர்த்தகம் என்பது வெறும் கட்டுக் கதையல்ல. அது குறித்தெல்லாம் கல்வெட்டுகள் சான்றாதாரமாக இருக்கின்றன. 

எனவே, பன்னெடுங்காலமாக தமிழர்களுக்கு வர்த்தகம் என்பது கை வந்த கலையாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே தற்போது நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்த மாநாடு மூலம் தமிழகத்தின் வர்த்தகத் துறையும், மாநிலத்தின் பெருமையும் வளர வாழ்த்துகிறேன். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு, முழு ஒத்துழைப்புக் கொடுக்கும்” என்று பேசினார். 

.