This Article is From Jun 20, 2019

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை; சென்னைக்கு மழை வாய்ப்பு? வானிலை மையம்

தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை; சென்னைக்கு மழை வாய்ப்பு? வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் இதர மாவட்டங்களில் வறட்சியே நீடிக்கிறது.

இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள், மழையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இதில், சென்னை கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. டேங்கர் லாரிகளுக்கு கூடுதல் பணம் கொடுப்பதாக கூறினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம், நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டது.

சென்னையில் பெருகிவிட்ட ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றுமாறு அறிவுறுத்திவிட்டனர். மேலும் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் தண்ணீருக்காக அலைய கூடிய சூழ்நிலை நிலவி வருவதால், மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் தகவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அடுத்த சில நாட்களில் தென் மேற்கு பருவமழை வலுப்பெறும், என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தற்போது, இந்தியாவின் 15 சதவீத இடங்களில் மட்டுமே, பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதாகவும், இது வழக்கத்தை விட குறைவு எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகாவின் தென்பகுதி மற்றும், தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே பெய்துவரும் மழை, மற்ற இடங்களுக்கும் பரவ, இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

.