This Article is From Jun 15, 2019

தண்ணீர் பிரச்சனைக்காக பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தண்ணீர் பிரச்சனைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் தவறு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பிரச்சனைக்காக பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு, இந்த ஆண்டு கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கிய செம்பரம்பாக்கம், வீராணம், புழல் உள்ளிட்ட ஏரிகள் பருவமழை பொய்த்து போனதால் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால் தண்ணீருக்காக சென்னைவாசிகள் அல்லாடி நிற்கின்றனர்.

இதேபோல், பள்ளிகளிலும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் கடந்த 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோதே, வெயில் மற்றும் தண்ணீர் பிரச்னை காரணமாக சில நாட்கள் கழித்து திறக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை அரசு ஏற்கவில்லை. இந்த ஆண்டு வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகளுக்கு மேலும் 2 வாரம் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் பள்ளிகல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை, அவ்வாறு வெளியானது தவறான தகவல். தமிழகத்தில் சில பள்ளிகள் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வருகிறது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜூன் 17 முதல் ஆய்வுப்பணிகள் நடைபெறும் என்று கூறிய அவர், பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டுவந்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என்றார். மேலும், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

.