மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு!!

மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் குடியுரிமை திருத்த மசோதா பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. இதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு!!

அரசியலமைப்பு சட்டத்தை குடியுரிமை திருத்த மசோதா மீறாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்ற முயற்சித்து வரும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-

இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு 0.001 சதவீதம் கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்தார். புலம் பெயர்ந்தவர்களுக்கு நன்மை அளிக்கின்றன மசோதா. 

அதனால் இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஆதரிக்கிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரானது என்று இந்த மசோதாவை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கும் இந்த மசோதா விரோதமாக இருப்பதாக தெரியவில்லை. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தள்ளது. இதில் உள்ள குறிப்பிட்ட சில பிரிவுகளால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நீண்டகாலமாக இருக்கின்றனர். அவர்கள் வெளியேற்றப்பட்டால் நில அமைப்பு ரீதியில் பிரச்னைகள் எழலாம். 

இதே மசோதாவை கடந்த ஆண்டும் மோடி அரசு அறிமுகம் செய்திருந்தது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களைவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், வடகிழக்கு மாநில போராட்டங்களின் எதிரொலியாலும் அறிமுகம் செய்ய முடியவில்லை. 

இந்தியாவில் உள்ள 0.001 சதவீத சிறுபான்மையினரைக் கூட இந்த மசோதா பாதிக்காது என்று அமித் ஷா கூறியுள்ளார். மசோதா அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் அதில் உள்ள நிறை குறைகளை விவாதிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னரே அதுபற்றி பேசக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.  
 

More News