This Article is From May 17, 2019

‘’23-ம்தேதிக்கு பின்னர் திமுக இரண்டாக உடையும்’’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கணிப்பு

தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தமிழக அமைச்சர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

‘’23-ம்தேதிக்கு பின்னர் திமுக இரண்டாக உடையும்’’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கணிப்பு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் வரும் 23-ம்தேதி வெளியாகின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ம்தேதிக்கு பின்னர் திமுக இரண்டாக உடையும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவேண்டிய 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மேலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஒட்டப்பிடாரம், சூலூர் உள்பட 4 தொகுதிகளுக்கு வரும் 19-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது-

வரும் 23-ம்தேதி வாக்குப்பதிவு முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகும்போது அதிமுக முன்னிலை என்ற தகவல் வரும். இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் டெபாசிட்டை வாங்கவே திமுக உள்ளிட்ட கட்சிகள் போராடுகின்றன.

23-ம்தேதிக்கு பின்னர் திமுக இரண்டாக உடையும். காங்கிரஸ் எப்படி இண்டிகேட், சிண்டிகேட் என்று பிரிந்ததோ அதே போன்ற நிலைமை ஏற்படும்.

திமுகவில் அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்த சுமார் 70 வயது மதிப்புடையவர்கள் ஒரு அணியாகவும், உதயநிதியின் பின்னால் இருக்கும் கொஞ்சப்பேர் பொதுநல விரோதிகள் ஒரு அணியாகவும் பிரியப் போகிறார்கள்.

திமுகவில் இருக்கும் நல்லவர்கள் அக்கட்சியை விட்டு விலகி அதிமுகவுக்கு வருவார்கள். அல்லது அரசியலை விட்டு ஒதுங்கி விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

.