Tamilnadu Rain - சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த திடீர் மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள அண்டை மாவட்டங்களில் பெரிதாக மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை அய்வு மையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி மற்றும் எண்ணூரில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வட சென்னையில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த திடீர் மழை குறித்து, பிரபல வானில வல்லுநர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான், “காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழையானது இன்று மற்றும் நாளையும் தொடரும். இன்னும் சொல்லப் போனால், அடுத்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ன் போதும் மழையை எதிர்பார்க்கலாம்” என்றுள்ளார்.