This Article is From Feb 21, 2019

குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது: கமல்ஹாசன்

குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப் போயுள்ளது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதை கட்சியின் தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக, சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் முன்னிலையில் இன்று காலை கொடி ஏற்றி வைத்தார் கமல்ஹாசன்.

அப்போது கட்சியின் கொள்கை குறித்து புதிய விளக்கம் அளித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கமல், ‘எங்கள் கொள்கை என்பது மிகச் சாதாரணமானது. மக்கள் நலன் மட்டும்தான் எங்கள் கொள்கை. கொள்கை குறித்து கட்டுக் கட்டாக புத்தகம் போட்டவர்கள் எல்லாம் அதைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். இப்போது கொள்கை அடிப்படையில் கூட்டணி என்று பிதற்றுகிறார்கள். நாங்கள் மக்கள் நலனை மட்டும் முன் வைத்து கொள்கைகளை வகுப்போம்' என்று கூறியிருந்தார்.

இந்நிலையல், திருவாரூரில் இன்று மாலை நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் 2ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன்,

மக்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இன்னும் சுரண்டி கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பிரதமர் யார் என்று தேர்வு செய்யும் பெரும் பங்கு தமிழர்களுக்கு உள்ளது. கிராம சபை நடத்தி ஹீரோ ஆகிவிட்டார் என்கின்றனர். கதையின் நாயகன் தானே ஹீரோ ஆக முடியும்.

எனக்கும் குடும்பம் உள்ளது; என் குடும்பத்தில் 8 கோடி பேர் உள்ளனர். வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி நினைத்துக் கொள்ள வேண்டும். நான் இனி உங்கள் சொத்து இனி என்னை எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியுமோ, அப்படி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மக்களாகிய நீங்கள் தான் முதலாளிகள் என்று எண்ணிக் கொள்ளுங்கள், நான் உட்பட அனைவரும் உங்கள் வேலைக்காரர்கள் தான் என்று அவர் கூறியுள்ளார்.

.