சலூன் கடை, சலவை தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்க பாஜக கோரிக்கை!!

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொழில்கள் முடங்கிப் போயுள்ளன. அரசு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

சலூன் கடை, சலவை தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்க பாஜக கோரிக்கை!!

பாஜக தமிழக தலைவர் எல். முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • பொது முடக்கத்தால் ஏழைத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
  • கர்நாடக அரசு சலூன் கடைக்காரர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிறது
  • நெசவாளர்கள், சலூன் கடைக்காரர்களுக்கு அரசு உதவ மாநில பாஜக கோரிக்கை

சலூன் கடை மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கும் மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது-

மே மாதம் 4-ம்தேதி முதல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. பல்வேறு வகைப்பட்ட அத்தியாவசிய பணிகளும், அனைத்து வகையான தொழில்களும், கடைகளும் திறக்க அனுமதி அளித்தும் கூட, சலூன்கள் திறக்க நோய் தொற்று காரணமாக அனுமதி இல்லை.

முடி திருத்தங்களுக்கு ஏன் அனுமதி இல்லை என்பதை அனைவருமே புரிந்து கொள்வர். கர்நாடக பாஜக அரசு சுமார் 60 ஆயிரம் சலவைத் தொழிலாளர்களுக்கும், 2,30,000 முடி திருத்துபவர்களுக்கும் மாதம் ரூபாய் 5 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்துள்ளது.

எனவே இத்தகைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து முடி திருத்தும் தொழிலாளிக்கும், சலவை தொழிலாளிக்கும் குடும்ப நிவாரண உதவியாக மாதம் ரூபாய் 5000 (மீனவர்களுக்கு வழங்குவது போலவே) வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அவர்களது பணி துவங்க தமிழக அரசு அனுமதிக்கும் வரை இந்த நிவாரண உதவி தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.