சென்னையிலிருந்து - கோவைக்கு விமானத்தில் வந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்  11,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 

சென்னையிலிருந்து - கோவைக்கு விமானத்தில் வந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு!

கோவையில் தரையிறங்கும் அனைத்து பயணிகளையும் நாங்கள் தொடர்ந்து சோதனை செய்வோம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பொது முடக்கத்திற்கு பின்னர் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், சென்னை - கோவை இண்டிகோ விமானம்தான் முதன் முதலில் இயக்கப்பட்டது.

கொரோனாவால் 23 வயது இளைஞர் பாதிக்கப்பட்ட தகவலை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி NDTVயிடம் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " விமானத்தில் வந்த 90 பயணிகளையும் சோதித்தோம். ஒருவரைத் தவிர மற்ற யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இளைஞரை தவிர்த்து மற்ற அனைவருமே வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். கோவையில் தரையிறங்கும் அனைத்து பயணிகளையும் நாங்கள் தொடர்ந்து சோதனை செய்வோம்" என்று தெரிவித்தார். 

அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்தலாம் என தமிழக அரசு விதிகளை சற்று தளர்த்தியுள்ளது. இருப்பினும், கோவை மாவட்ட நிர்வாகம் அனைத்து பயணிகளுக்கும் சோதனையை நடத்தியுள்ளது. 

தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்  11,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி விமானங்களை மீண்டும் தொடங்குவதை மே 31 வரை ஒத்திவைக்குமாறு, மத்திய அரசை மாநில அரசு கேட்டுக் கொண்டது. இதனை மறுத்த மத்திய அரசு 25 விமானங்களை இயக்க அனுமதித்துள்ளது. இதற்கிடையே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும், குஜராத், மகாராஷ்டிராவிலிருந்து விமானங்களை இயக்கக்கூடாது என்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருக்கிறது. 

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் களம் இறக்கப்பட்டுள்ளன. 

கொரோனா விவகாரத்தில் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. சமூக விலகலை பேணாதது, டாஸ்மாக்கை திறந்து விட்டது உள்ளிட்டவற்றை காரணம் காட்டி திமுக அதிமுகவை விமர்சிக்கிறது. 

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 127 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் மற்ற மாநிலங்கள நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.69% ஆகத்தான் உள்ளதென்றும், இது மிக மிக குறைவு என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.