This Article is From Sep 12, 2020

நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது வேதனையளிக்கிறது:முதல்வர் பழனிசாமி!

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்

நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது வேதனையளிக்கிறது:முதல்வர் பழனிசாமி!

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவி ஜோதிதுர்காவின் மரணத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை (செப்.13) நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் தோற்றுவிடுவோமா என்ற பயத்தில் மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா என்ற மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், மாணவி ஜோதி துர்காவின் இறப்புக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வி.ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்'. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

.