This Article is From Apr 17, 2020

'குறை சொல்ல வேண்டிய நேரமா இது?' - திமுக தலைவரை விளாசிய தமிழக முதல்வர்!!

வேண்டுமென்றே தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும், கொரோனா விஷயத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளது. எங்களைப் பொருத்தவரை மக்களுக்கு பணி செய்வதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

'குறை சொல்ல வேண்டிய நேரமா இது?' - திமுக தலைவரை விளாசிய தமிழக முதல்வர்!!

இன்னும் சில நாட்களில் கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டுவிடும் என முதல்வர் கூறியுள்ளார்.

'திமுக தலைவர் ஸ்டாலினை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். கொரோனா பாதித்திருக்கும் இக்கட்டான நேரத்தில் எந்த மாநிலத்தில் அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன?. தமிழ்நாட்டில்தான் இதுபோன்ற நிலை இருக்கிறது' என்று திமுக தலைவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழக அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு மற்றும் அனைதுதுக் கட்சி கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் அளித்த பதில்- 

திமுக தலைவர் ஸ்டாலினை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். அவர் வைக்கும் விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கொரோனாவுக்கு எதிராக நாம் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் என்றால் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு தினந்தோறும் ஏதாவது அறிக்கையை விடுவது; அதிமுக அரசை குற்றம் சொல்லிக்கொண்டிருக்க கூடாது. அரசும் அனைத்து அதிகாரிகளும் இரவு பகல் பாராமல், குடும்பத்தை விட்டு உயிரை துச்சமாக மதித்து மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். குற்றம் சொல்ல வேண்டிய நேரமா இது?. உயிரைக் காக்க வேண்டிய நேரம். 

உயிரைக் காப்பதற்கு வழிமுறைகள் சொன்னால் அதை வரவேற்கலாம். அதை விட்டு விட்டு, அங்கே ஒரு குறை; இங்கே ஒரு குறை; என சுட்டிக்காட்டுவது என்ன பொருத்தமாக இருக்கும் என்பதை பத்திரிகையாளர்கள் உணர வேண்டும். 

திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்ன ஆலோசனை சொல்ல முடியும்?. அவர்களெல்லாம் மருத்துவர்களா?. இந்த நேரத்தில் மருத்துவர்கள்தான் ஆலோசனை சொல்ல முடியும். மருத்துவ வல்லுனர்கள் அறிவுரைப்படி அரசு செயல்பட்டால்தான் கொரோனாவை தடுத்து நிறுத்த முடியும். அரசியல்வாதிகள் என்ன பேச முடியும்?.

இன்றைக்கு 2 மாநில பிரச்னையா நடந்து கொண்டிருக்கிறது? நீர் பிரச்னையா? அப்படியிருந்தால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அதில் தீர்மானம் எடுத்து செயல்படுத்தலாம். கொரோனா பாதிப்பு மருத்துவம் சார்ந்தது. இதனை எதிர்கொள்ள மருத்துவ ஆலோசனைக்குழுவை அமைத்தோம். 

வேண்டுமென்றே தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும், கொரோனா விஷயத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளது. எங்களைப் பொருத்தவரை மக்களுக்கு பணி செய்வதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

இந்த இக்கட்டான நேரத்தில் எந்த மாநிலத்தில் அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன?. தமிழ்நாட்டில்தான் இதுபோன்ற நிலை இருக்கிறது. 

இவ்வாறு தமிழக முதல்வர் பேசினார்.

.