This Article is From May 04, 2020

கவர்னருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! கொரோனா தடுப்பு குறித்து விளக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று ஒரேந ளில் மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கவர்னருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு! கொரோனா தடுப்பு குறித்து விளக்கம்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாராட்டியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • கவர்னர் பன்வாரிலாலை தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் சந்தித்தனர்
  • கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கவர்னரிடம் எடுத்துரைக்கப்பட்டது
  • அரசின் நடவடிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் பாராட்டு தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்ப நடைபெற்றது. 

இந்த சந்திப்பின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், காவல்துறை தலைவர் திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேட்டறிந்த கவர்னர், தமிழக அரசை பாராட்டியுள்ளார். 

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 527 ஆக அதிகரித்திருக்கிறது.  இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்திருக்கிறது. 
இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 527 பேரில் 377 பேர் ஆண்கள்; 150 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் 12 ஆயிரத்து 773 பேருக்குகொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில்தான் 527 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் மையங்கள் 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 36 அரசு ஆய்வகங்கள். மற்ற 14, தனியாருக்கு சொந்தமானவை.

கடந்த 24 மணிநேரத்தில் 30 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 3,550 பேரில் 1,409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இன்று ஒருவர் உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போது மொத்தம் 2,107 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 
 

.