This Article is From Jul 05, 2019

''மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது - தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி'' : தமிழக முதல்வர்

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டபோது பிசிராந்தையார் பாடிய புறநானூற்று பாடலை நிதி நிலை அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

''மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது - தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி'' : தமிழக முதல்வர்

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது என்றும், புறநானூற்று பாடலை குறிப்பிட்டு தமிழுக்கு மத்திய பட்ஜெட் பெருமை சேர்த்துள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனை வரவேற்று பாஜக கூட்டணி கட்சிகளும், விமர்சனமும், எதிர்ப்பையும் தெரிவித்து எதிர்க்கட்சிகளும் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. 

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், ஏழை நடுத்த மக்களை கணக்கில் கொள்ளாத பட்ஜெட் என்று விமர்சித்திருக்கிறார். காங்கிரஸ் எம்.பி. வசந்த குமார், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு குறித்து தெளிவான விவரங்கள் பட்ஜெட்டில் இல்லை என்று கூறியுள்ளார். கங்கையை தூய்மைப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 80 ஆயிரம் கோடி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பட்ஜெட்டை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது-

இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான புதிய கொள்கைகளோடும், சீரிய பல திட்டங்களோடும், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை வரவேற்கிறேன். 

கோவை, மதுரை மாநகராட்சியில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை புறநகர் ரயில்வே சேவைகளை மேம்படுத்த வேண்டும்

பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை பெரிதும் வரவேற்கிறோம். இது சுய உதவிக்குழுக்கள் தொழில் செய்ய பேருதவியாக அமையும். 

அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த பட்ஜெட்டை நான் வரவேற்கிறேன்.

பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப்பாடலை பட்ஜெட்டில் மேற்கோள் காட்டி, தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

.