'ஒரு வாரத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும்' - இல. கணேசன் தகவல்!!

பாஜகவின் மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர ராஜன், தெலங்கானா மாநில கவனர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பாஜக தமிழக தலைவர் பதவி காலியானது.

'ஒரு வாரத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும்' - இல. கணேசன் தகவல்!!

பாஜக தலைவராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு வாரம் அல்லது பத்து, பதினைந்து நாட்களுக்குள் தமிழகத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த இன்று அவர் அளித்த பேட்டியில், 'பாஜக மாநில தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாக தேசிய தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்யும் நாள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக ஒரு வாரம் அல்லது பத்து, பதினைந்து நாட்களில் பாஜக தமிழக தலைவருக்கான தேர்தல் நடைபெறும்' என்று தெரிவித்தார். 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம்தேதி தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. தலைவர் இல்லாமலேயே பாஜக உள்ளாட்சி தேர்தலையும் சந்தித்தது. 

இதனிடையே தலைவர் பதவிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டு வந்தது. இந்த நிலையில் பாஜக தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து நிர்வாகிகளிடம் மேலிட பொறுப்பாளர்கள் கருத்து கேட்கும் கூட்டம் கடந்த 5-ம்தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மேலிட பிரதிநிதிகள் நரசிம்மராவ் சிவப்பிரகாஷ் உள்பட 3 பேர் குழு கருத்துக்களை கேட்டனர். மாநில நிர்வாகிகள் இளைஞர் அணி மகளிர் அணி, விவசாய அணி உள்ளிட்ட துணை அமைப்புகளைச் சேர்ந்த 42 பேரிடம் தனித்தனியாக அழைத்து கருத்து கேட்கப்பட்டது.

இதில் தமிழக பாஜக தலைவராக குப்புராமு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது. இவர் பாஜக துணைத் தலைவராகவும், விஷ்வ இந்து பரி‌ஷத் மாநில தலைவராகவும் பதவி வகித்தவர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புராமு, 1986-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பட்டினம்காத்தான் முதல் நிலை ஊராட்சி ஒன்றிய தலைவராக 3 முறை பதவி வகித்துள்ளார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார்.

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தலைவராகத் தேர்வு செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. 

More News