This Article is From Apr 21, 2019

புதுக்கோட்டை கலவரத்தை தொடர்ந்து 1,500 போலீசார் குவிப்பு! 144 தடை உத்தரவால் பதற்றம்!!

பொன்னமராவதியில் பரவிய வாட்ஸப் செய்தியால் இரு சமூகத்திற்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல் நிலையம் சூறையாடப்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.

புதுக்கோட்டை கலவரத்தை தொடர்ந்து 1,500 போலீசார் குவிப்பு! 144 தடை உத்தரவால் பதற்றம்!!

கலவரம் தொடர்பாக 1000-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pudukottai:

புதுக்கோட்டை கலவரத்தை தொடர்ந்து இயல்புநிலையை ஏற்படுத்த அங்கு 1,500-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு இன்று இரவு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

தஞ்சை மக்களவை தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் செல்வராஜையும், அவர் சார்ந்திருக்கும் சமூகத்தையும் அவதூறாக பேசி ஆடியோ ஒன்று வாட்ஸப்பில் பரவியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் போலீஸ் நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. இதன்பின்னர் வன்முறையாளர்கள் கற்களை வீசி தாக்கியதுடன், போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் மொத்தம் 13 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இயல்பு நிலைமையை கொண்டு வருவதற்காக பொன்னமராவதியில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று மதுபானக் கடைகள் திறக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

.