This Article is From Jan 21, 2019

“கொல்கத்தா பேரணியில் ராகுல் பெயரை முன்மொழியாதது ஏன்..?”- ஸ்டாலினைச் சீண்டும் பாஜக

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பிரமாண்ட எதிர்கட்சிப் பேரணி கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்தது.

“கொல்கத்தா பேரணியில் ராகுல் பெயரை முன்மொழியாதது ஏன்..?”- ஸ்டாலினைச் சீண்டும் பாஜக

கருணாநிதியின் முழு உருவச் சிலைத் திறப்பு விழாவின் போது, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக
  • ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் ஸ்டாலின்
  • ஸ்டாலினின் கருத்தோடு ஒன்றிப்போகவில்லை மற்ற எதிர்கட்சிகள்
Chennai:

பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சீண்டும் விதத்தில் பேசியுள்ளது பாஜக.

சென்னையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமாகவும் இருந்த கருணாநிதியின் முழு உருவச் சிலைத் திறப்பு விழாவின் போது, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய ஸ்டாலின், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். ராகுலை பிரதமர் வேட்பாளாராக அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று பேசினார். ஸ்டாலினின் இந்தக் கருத்தை மற்ற எதிர்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பிரமாண்ட எதிர்கட்சிப் பேரணி கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், ராகுல் குறித்து எதுவும் பேசவில்லை. ஸ்டாலினின் இந்த செயலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசுகையில், “கடந்த மாதம் ஸ்டாலின், ‘ராகுல்தான் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும்' என்றார். ஆனால், கொல்கத்தாவில் அது குறித்து வாய் திறக்கவே இல்லை. இது எதிர்கட்சிகள் மத்தியில் ஸ்டாலினுக்கு செல்வாக்கு இல்லை என்பதைத் தான் காட்டுகிறது” என்றார். 

இதற்கு பதில் கருத்து அளித்துள்ள ஸ்டாலின், “ராகுல் காந்தியின் பெயரை நான் முன்மொழிந்தேன். இப்போதும் அந்தக் கருத்தில் ஆணித்தரமாக இருக்கிறேன். சென்னையில் திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட விழாவில் அந்தக் கருத்தைச் சொன்னேன். தமிழகம் மக்கள் என்ன நினைத்தார்களோ, அதைத்தான் நான் எதிரொலித்தேன். ஆனால், கொல்கத்தாவில் நிலைமை வேறு. அங்கு தேர்தல் முடிந்த பிறகு பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது அவர்களுடைய விருப்பம்” என்று கொதித்தார். 

மற்ற எதிர்கட்சிகளும் இந்த முடிவில்தான் உள்ளன என்பது தெரிகிறது. மம்தா பானர்ஜி, பிரதமர் வேட்பாளர் குறித்து பேசும்போது, “எதிர்கட்சிகளின் கூட்டணி என்பது, தன்னிச்சையான முடிவுகளால் ஆனது அல்ல. கூட்டணி என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு நானும் கட்டுப்படுவேன். இப்போது அது குறித்து பேச வேண்டியதில்லை” என்று கறாராக சொல்லிவிட்டார். 

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், “இந்தத் தேர்தல் தலைமையைப் பொறுத்தது அல்ல. இது கொள்கையைப் பொறுத்தது. எந்தக் கொள்கை வெற்றி பெற வேண்டும் என்பதைப் பொறுத்தது. தேர்தல் முடிந்த பிறகுதான் யார் தலைமை ஏற்பார் என்பது குறித்து முடிவெடுக்க முடியும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

.