'திமுகவின் வளர்ச்சியைத் தடுக்க அதிமுக சதி செய்கிறது' - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

'திமுகவின் வளர்ச்சியைத் தடுக்க அதிமுக சதி செய்கிறது' - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Chennai:

உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக சதி செய்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்று கூறிய ஸ்டாலின் அதிமுக வெற்றி பெற்ற இடங்கள் மட்டுமே அறிவிக்கப்படுவதாக புகார் கூறினார். 

'வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவினர் வெளியேற்றப்பட்டு அதிமுகவினரை வைத்துக் கொண்டு வாக்குகள்' எண்ணப்படுகின்றன என்று தெரிவித்த ஸ்டாலின், ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் 3 வாக்குப் பெட்டிகள் காணாமல் போயுள்ளதாகவும் கூறினார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து திமுக சார்பில் ஸ்டாலின் புகார் அளித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உறுதி அளித்திருக்கிறார். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் திமுக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், 'திமுகவினரின் வெற்றியைத் தடுக்க ஆளும் அதிமுக சதி செய்து வருகிறது. முதல்வரின் சொந்த தொகுதி அமைந்திருக்கும் சேலம் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு விட்டன. அங்கு திமுக முன்னிலையில் இருந்தது. இருப்பினும், முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம். இதுதொடர்பாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார். 

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஒப்படைக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சமீபத்திய தகவலின் அடிப்படையில் மொத்தம் உள்ள 5,090 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் திமுகவினர் 77 இடங்களிலும், அதிமுகவினர் 64 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது திமுக தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37-ல் வெற்றி பெற்றது. அதிமுக ஓரிடத்தில் வென்றது. இந்த தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. இருப்பினும், அக்டோபர் மாதம் நடந்த இடைத் தேர்தலில் திமுக வசம் இருந்த 2 சட்டமன்ற தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. 

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தளவில் மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இவற்றில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் ஆகிய 4 பதவிகள் அடங்கும். 

இந்த தேர்தலில் சுமார் 2.30 லட்சம்வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழக தேர்தல் ஆணையம் அளித்துள்ள தகவலின்படி முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், 2-வது கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.