This Article is From Jul 15, 2019

தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: சட்டப்பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்!

இந்த விவகாரம் குறித்து நாளை நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள், இதற்கு மத்திய அரசு கொடுக்கும் பதிலைப் பொறுத்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என துணை முதல்வர் தெரிவித்தார்.

தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: சட்டப்பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்!

தமிழர்கள் மத்திய அரசுப் பணியில் சேரக்கூடாது என திட்டமிட்டுள்ளதாக திமுக குற்றச்சாட்டு


தபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் நாளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளிக்கும் பதிலை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக - அதிமுகவினர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, தபால் துறை போட்டித்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். 

அப்போது, தமிழர்கள் மத்திய அரசுப் பணியில் சேரக்கூடாது என திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடு அரசு, இந்த விவகாரம் குறித்து நிச்சயம் மத்திய அரசை வலியுறுத்தும் என்று கூறினார். 

பின்னர் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், இரு மொழிக் கொள்கையில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறோம், அதே வேளையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றுமா எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்த விவகாரம் குறித்து நாளை நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள், இதற்கு மத்திய அரசு கொடுக்கும் பதிலைப் பொறுத்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என பதிலளித்தார். 

தொடர்ந்து, பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக இந்த விவகாரத்தில் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி வருவதாகக் கூறினார்.

இதனிடையே தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு உறுதியான பதில் அளிக்கவில்லை என்றும், உணர்வோடு பேசும் திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியதாகவும் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய துரைமுருகன், நாங்கள் உணர்வோடு இந்த விவகாரம் குறித்து பேசுகிறோம், ஆனால் திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியதால் அதனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். அதனை தொடர்ந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

மீண்டும் பேசிய முதல்வர், திமுகவினர் ஏதாவது காரணத்தை தேடி பார்த்ததாகவும், எதுவும் கிடைக்காததால், இந்த விவகாரத்தை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு வெளிநடப்பு செய்துள்ளதாக பேசினார்.
 

.