This Article is From Dec 29, 2019

‘’மதரீதியில் கருத்து தெரிவித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ – முக்தர் அப்பாஸ்!

வன்முறையை போலீஸ், சமூக விரோத கும்பல் என யார் செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

‘’மதரீதியில் கருத்து தெரிவித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ – முக்தர் அப்பாஸ்!

அப்பாவிகள் பாதிக்கப்படுவதை போலீசார் தடுக்க வேண்டும் என்று முக்தர் அப்பாஸ் நக்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

Lucknow:

உத்தரப்பிரதேசத்தில் மத ரீதியில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாஜக அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீசார் வீடியோ ஒன்றில் மத ரீதியாக பேசிய வீடியோ, வெள்ளிக்கிழமை மீரட்டில் உலா வந்தது. அன்றைக்கு தொழுகைக்கு பின்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இதனை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், மீரட் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் நாராயண், 2 நபர்களைப் பார்த்து நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுபற்றி பேட்டியளித்துள்ள மத்திய பாஜக அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘வீடியோவில் இருப்பது உண்மையாக இருந்தால், அது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வன்முறையை போலீசாரோ அல்லது சமூக விரோத கும்பல்  என யார் செய்தாலும் அதனை ஏற்க முடியாது. ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற செயல்களுக்கு இடமில்லை. அப்பாவி மக்கள் பாதிக்கப்படால் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு உள்ளது' என்று தெரிவித்தார்.

வீடியோவில் போலீஸ் அதிகாரி அகிலேஷ் நாராயண் சிங் பாதை ஒன்றில் கலவர தடுப்பு உடைகள் அணிந்து நடந்து செல்கிறார். அவருடன் சில போலீசாரும் நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அப்போது, வழியில் வரும் குல்லா அணிந்த முஸ்லிம்களைப் பார்த்து, எங்கு செல்கிறீர்கள்? இந்தப் பாதையில் செல்வதற்கு வழி விடுங்கள் என்று கேட்கிறார்.  இந்த வீடியோ சுமார் 2 நிமிடங்களுக்கும் குறைவாக ஓடுகிறது.

முஸ்லிம்கள் அதற்கு நாங்கள் தொழுகைக்காக செல்கிறோம் என்று பதில் அளித்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்த போலீஸ் அகிலேஷ் நாராயண், ‘நல்லது. ஆனால் இந்த கருப்பு மற்றும் நீல பட்டைகளை நீங்கள் அணிந்துள்ளீர்கள். நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள். இங்கு நீங்கள் வாழ விரும்பாவிட்டால், வெளியேறி விடுங்கள். நீங்கள் மட்டும் இந்தியாவுக்கு வரலாம். ஆனால் நீங்கள் யாரையோ புகழ்ந்து பேசுகிறீர்கள்?' என்று காட்டமாக பேசியுள்ளார்.

இதன்பின்னர்அவரை சூழ்ந்து கொண்ட முஸ்லிம்கள் மூன்று பேர் ‘நீங்கள் சொல்வது சரிதான்' என்று பதில் அளித்துள்ளனர்.

இந்த வீடியோவில், போலீஸ் அதிகாரி சிங்கும் மற்ற போலீசாரும் முன்னோக்கி செல்ல பார்க்கின்றனர். ஆனால், சற்று கோபமடைந்த நிலையில், ஏற்கனவே விமர்சித்த நபர்கள் முன் வந்து, ‘நான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சிறைக்குள் அனுப்புவேன்', ‘ஒவ்வொருவரையும் அழிப்பேன்' என்று கூறுகிறார்.

வெள்ளிக் கிழமையன்று போராட்டக்காரர்கள் மிகக் கடுமையாக கற்களை வீசியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் மீரட் போலீசார் தெரிவித்துள்ளனர். மீரட்டில் மட்டும் குடியுரிமை சட் திருத்தத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிக உயிரிழப்பு இந்த விவகாரத்தில் ஏற்பட்டிருப்பது மீரட்டில் மட்டும்தான்.

பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டால் காயம் அடைந்து உயிரை விட்டுள்ளனர். இதற்கு உத்தரப்பிரதேச போலீசார் தாங்கள் காரணம் அல்ல என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் வெவ்வேறு இடங்களில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள், சட்டவிரோதமாக வரவழைக்கப்பட்ட துப்பாக்கிகளால் சுடத் தொடங்குகின்றனர்.

வீடியோ தொடர்பாக அகிலேஷ் நாராயண் அளித்துள்ள பேட்டியில், ‘சில போராட்டக்காரர்கள் எங்களைப் பார்த்ததும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புகிறார்கள். இது அவர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என்பதை காட்டுகிறது. அவர்களைப் பார்த்து நாங்களும் திட்டினோம். நாங்கள் அவர்களிடம் சிறுவர்களைப் பற்றி பேசினோம். அவர்களும், இதே பகுதியில்தான் வசிக்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியபோது அவர்களுக்கு நாங்கள் பதிலடி கொடுத்தோம்.' என்று போலீஸ் அதிகாரி அகிலேஷ் சிங் தெரிவித்தார்.

‘வார்த்தைப் பிரயோகம் என்பது நிலைமையை பொறுத்து மாறுபடும். இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் சிலர் எழுப்புகின்றனர். ஏற்கத்தகாத துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்கின்றனர். அவர்களிடம் சென்று நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இங்கு அழிவுக்கு காரணமாக ஆகி விடாதீர்கள்' என்று மீரட் பகுதிக்கான கூடுதல் ஏடிஜிபி பிரசாந்த் குமார் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், கடந்த 20-ம்தேதி நிலைமை மிகவும் பதற்றமாக இருந்தது. சாதாரண சூழலின்போது, நாங்கள் நல்ல விதமாகத்தான் வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளோம். எங்களது அதிகாரிகள் எல்லோரிடமும் தவறாக நடந்து கொள்வது இல்லை. இந்த வீடியோவை பரப்பியவர்கள் சூழலை மோசமாக்க பார்க்கிறார்கள்'  என்று தெரிவித்தார்.

.