This Article is From Jul 14, 2018

'சோஷியல் மீடியா ஹப்': கேள்விகளால் அரசை துளைத்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

மத்திய அரசு சார்பில் ‘சோஷியல் மீடியா ஹப்’ என்ற சமூக ஊடக கண்காணிப்பு மையத்தை நாட்டின் பல்வேறு இடங்களில் உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

'சோஷியல் மீடியா ஹப்': கேள்விகளால் அரசை துளைத்தெடுத்த உச்ச நீதிமன்றம்!

ஹைலைட்ஸ்

  • சோஷியல் மீடியா ஹப் குறித்து உச்ச நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியுள்ளது
  • மத்திய அரசை இரண்டே வாரங்களில் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
  • வழக்கு, மீண்டும் ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு வரும்
NEW DELHI/KOLKATA:

தனி நபர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்க மத்திய அரசு சார்பில் ‘சோஷியல் மீடியா ஹப்’ என்ற சமூக ஊடக கண்காணிப்பு மையத்தை நாட்டின் பல்வேறு இடங்களில் உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கின் போது, உச்ச நீதிமன்றம், மத்திய அரசை பல்வேறு கேள்விகள் மூலம் துளைத்தெடுத்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மஹுவா மைத்ரா சார்பில், மத்திய அரசின் சோஷியல் மீடியா ஹப் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது மைத்ரா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி ஆஜரானார். அவர், ‘சோஷியல் மீடியா அமைப்பது தொடர்பாக மத்திய அரசு சார்பில் இந்தாண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏலம் வெளியிடப்பட்டது. தற்போது, இதற்கான அடுத்தக்கட்ட ஏலம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் எண்ணம் நிறைவேறினால், இந்தியாவில் யார் எங்கிருந்து எதை சமூக ஊடகங்களில் செய்தாலும் அதை மிகச் சுலபமாக ஊடுருவிப் பார்க்கும் நிலை உருவாகும்’ என்று வாதாடினார் சிங்வி.

ஆனால் அரசு தரப்பிலோ, ‘அரசின் பல்வேறு திட்டங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பிரசாரங்கள் மக்கள் மத்தியில் எப்படி சென்றடைகின்றன என்பதை தெரிந்து கொள்ளவே சோஷியல் மீடியா ஹப்-ஐ உருவாக்க நினைக்கிறோம். அதேபோல நாட்டு மக்கள் மத்தியில் எப்படி ஒரு பரந்துப்பட்ட தேசிய உணர்வை ஏற்படுத்துவது என்பதையும் ஆராய்வோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதிபதிகளுக்குக் கீழ் விசாரிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட பிறகு நீதிமன்றம், ‘நாட்டு குடிமக்களின் சமூக ஊடக கணக்குகளில் ஊடுருவி வேவு பார்க்க முயல்கிறதா அரசு? இது சர்வெய்லன்ஸ் செய்யும் பாணியை உருவாக்கும்’ என்று மத்திய அரசை விமர்ச்சித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இரண்டே வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

‘சோஷியல் மீடியா ஹப்’ திட்டம் குறித்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

.