ஷாகீன் பாக் சிஏஏ போராட்டம்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

ஷாகீன் பாக் சிஏஏ போராட்டம்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

ஷாகீன் பாக் போராட்டம் இந்தியாவையும் தாண்டி, உலக அளவில் கவனம் பெற்றது.

ஹைலைட்ஸ்

  • சிஏஏவுக்கு எதிரான போராட்டம் ஷாகீன் பாக்கில் நடந்து வருகிறது
  • உலக அளவில் இந்தப் போராட்டம் கவனம் பெற்றது
  • இந்தப் போராட்டத்தால் முக்கிய சாலை ஒன்று முடங்கியது

டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை அப்புறுப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம், "அனைத்துத் தரப்பினரும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்" என்று கூறி மார்ச் மாதத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. 

ஷாகீன் பாக் போராட்டம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் முன்னதாக, ஒரு குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழு கடந்த திங்கட்கிழமை தனது அறிக்கையை மூடிய கவரில் வைத்து நீதிமன்றத்திடம் சமர்பித்தது. 

ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடப்பதால் போக்குவரத்துக்கான சாலை முடங்கியது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை போராட்டக்காரர்களிடம் பேசி, அவர்களின் போராட்டத்தை வேறொரு இடத்தில் நடத்தவைக்க முயற்சி மேற்கொண்டது. 

ஷாகீன் பாக் போராட்டம் இந்தியாவையும் தாண்டி, உலக அளவில் கவனம் பெற்றது. நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்துக்கும் வழிகோலியது. சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத்தான் இந்தப் போராட்டம் அரங்கேற்றப்பட்டது. மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று அதை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். 

ஷாகீன் பாக் போராட்டக்காரர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், “சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டெல்லி - நொய்டாவை இணைக்கும் சாலையை முடக்கியுள்ளனர்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 

Listen to the latest songs, only on JioSaavn.com