This Article is From Jan 31, 2019

சபரிமலை விவகாரம் தொடர்பான மேல்முறையீடு: உச்ச நீதிமன்ற விசாரணை தேதி அறிவிப்பு!

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

சபரிமலை விவகாரம் தொடர்பான மேல்முறையீடு: உச்ச நீதிமன்ற விசாரணை தேதி அறிவிப்பு!

தீர்ப்புக்கு எதிராக 48 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

New Delhi:

சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக 48 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி 6 ஆம் தேதி முதல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் நீதிபதிகள் கொண்ட அமர்வு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும். இந்த வழக்கு ஜனவரி 22 ஆம் தேதியே விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அமர்விலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா, மருத்துவ விடுப்பில் இருந்ததால், தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. 

10 முதல் 50 வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்களும் வலதுசாரி அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. 

நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து ஒருசில பெண்கள் தான் இதுவரை கோயிலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. அப்படி கோயிலுக்குள் நுழைந்த ஒரு பெண்ணை, தனது குடும்பத்தாரே தாக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. 

பெண்கள் நுழைவு குறித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில், ‘தீர்ப்பை அடுத்து இதுவரை 51 பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்திருக்கிறார்கள்' என்று கூறியுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையை வலுதுசாரி அமைப்புகள் மறுத்துள்ளன. 

கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத்தான் நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து சபரிமலை கோயிலுக்குள் யார் செல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டாலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்புக் கொடுப்போம்' என்று கூறி வருகிறார். 

ஆனால் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

.