This Article is From Sep 23, 2019

சுபஸ்ரீ விவகாரம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

சுபஸ்ரீ விவகாரம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன. 

தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் யாரும் கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இதேபோல், நடிகர் விஜய்யும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

இதனிடையே, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர்  அடங்கிய அமர்வு முன்பு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள், தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், சட்டவிரோத பேனர்கள் வைப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும், சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

இந்நிலையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ந்து, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருந்தாலும், இந்த வழக்கை விசாரிக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்த நீதிபதி, சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மனு தொடர்பாக நாளை மறுதினம் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

.