சுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள ஜெயகோபால் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த செப்.12ஆம் தேதி பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னையில் பல்வேறு இடங்களிலும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சாலையில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் ஒன்றே சுபஸ்ரீயின் உயிரை பறித்தது. 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. 

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அதேபோல், பேனரை அச்சடித்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. எனினும் பேனரை வைத்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபால், பின்னர் வேறுவழியின்றி சரணடைந்தார்.  

இதனிடையே, சிறையில் உள்ள ஜெயகோபால் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழை நோயாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மதுரையில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேபோன்று மேகநாதன் என்பவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளிகரணையில் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது