This Article is From Oct 10, 2018

தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய நெல்லை மாணவர்கள்- போலீஸ் தடியடி!

இந்த நடவடிக்கையால், மாணவர்கள் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது

தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய நெல்லை மாணவர்கள்- போலீஸ் தடியடி!

தேர்வுகளுக்கான கட்டணம் அதிகரித்ததைக் கண்டித்து, திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரம் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று, பல்கலைக்கழ வளாகத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பல்கலைக்கழக தேர்வுகளைப் பொறுத்தவரை, ஒரு தாளுக்கு 100 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தக் கட்டணம் 400 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண அதிகரிப்பைக் கண்டித்து இடதுசாரி மாணவ அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்னர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம், ‘தேர்வுக் கட்டணத்தை 400 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக குறைக்கின்றோம். போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவர்களோ, ‘கட்டண அதிகரிப்பு முழுவதுமாக வாபஸ் பெறப்பட வேண்டும்’ என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த, உள்ளூர் காவல் துறையினர், அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால், மாணவர்கள் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸின் இந்த நடவடிக்கையும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.