This Article is From Dec 10, 2019

'இலங்கை தமிழர்களின் குடியுரிமையை கவனத்தில் கொள்ளுங்கள்': ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் கோரிக்கை!!

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு சார்பாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்.

'இலங்கை தமிழர்களின் குடியுரிமையை கவனத்தில் கொள்ளுங்கள்': ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் கோரிக்கை!!

மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

Chennai:

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதா சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் குடியுரிமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். 

இந்த விவகாரம் தொடர்பாக ரவிசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமையை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தகைய கோரிக்கையை ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மத்திய அரசுக்கு முன் வைத்துள்ளார். 

மத்திய அரசு கொண்டுவரவுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31-ம்தேதிக்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்ஸி, கிறிஸ்துவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும். அந்த நாட்டில் அவர்கள் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டதன் காரணமாக இந்தியா வந்ததால், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளது. 

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தமிழக அரசு அகதிகள் முகாமை அமைத்துள்ளது. இங்கு இலங்கையில் இருந்தது வந்த தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியுள்ளனர். 

குடியுரிமை மசோதா விவகாரத்தில் இலங்கை தமிழர்களின் நிலை குறித்து தெளிவாக ஏதும் தெரிவிக்கப்படாததால் சர்ச்சை நிலவுகிறது. 
 

.