This Article is From Apr 27, 2019

தீவிரவாதிகளைப் பிடிக்க இலங்கையில் நடந்த ரெய்டு; போலீஸ் மீது தாக்குதல் நடத்திய மர்மகும்பல்

நேற்று கொலம்போவில் பல இடங்களில் போலீஸ் ரெய்டு நடந்தது

தீவிரவாதிகளைப் பிடிக்க இலங்கையில் நடந்த ரெய்டு; போலீஸ் மீது தாக்குதல் நடத்திய மர்மகும்பல்

'140 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. போலீஸ் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது’

Colombo:

இலங்கையில் ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்களை கைது செய்ய அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. தீவிரவாதிகளை கைது செய்ய நேற்று இலங்கையின் பாதுகாப்புப் படையினர் பாட்டிகலோவுக்கு அருகே சோதனைப் பணியில் ஈடுட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பாதுகாப்புப்  படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு 140 ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை தற்போது கைது செய்து விசாரிக்க இலங்கை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இது குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ‘கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். இதுவரை எங்களுக்குக் கிடைத்த தகவல்படி, 140 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. போலீஸ் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது' என்று கூறினார். 

இதையொட்டி நேற்று கொலம்போவில் பல இடங்களில் போலீஸ் ரெய்டு நடந்தது. அம்பாரா சாய்ந்தமருது டவுனுக்கு அருகில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வெடிவிபத்து ஒன்று நடந்துள்ளது. அங்கு பாதுகாப்புப் படை விரைந்து சென்றபோது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பதிலுக்கு படையினரும் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை உயிரிழப்பு குறித்துத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. 

இதுவரை போலீஸ் தரப்பு 76 பேரை கைது செய்துள்ளது. சிரியா, எகிப்து நாட்டைச் சேர்ந்த பலரும் அதில் அடங்குவர். 

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்குத் தாங்கள்தான் காரணம் என்று கூறியிருந்தாலும், அந்தக் கருத்துக்கான ஆதாரத்தை இதுவரை கொடுக்கவிலை என்பது குறிப்பிடத்தக்கது. 


 

.