This Article is From Oct 28, 2018

வன்முறையாக மாறும் இலங்கை அரசியல் குழப்பம்… துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு எதிரான சிறிசேனா ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்

வன்முறையாக மாறும் இலங்கை அரசியல் குழப்பம்… துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம்!

ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டுக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்

Colombo:

இலங்கையில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பம் வன்முறை வடிவத்தை எடுத்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் கொழும்புவில் நடந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து போலீஸ், ‘விக்ரமசிங்கேவின் விசுவாசியும், பெட்ரோலிய துறை அமைச்சருமான அர்ஜுனா ரணத்துங்காவுக்கு, இலங்கை அதிபர் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் இன்று அச்சுறுத்தல் விடுத்தனர். இதையடுத்து, ரணத்துங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் 3 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றிருந்தது. 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணியில் சமீப காலமாக மோதல போக்கு நிலவி வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு எதிரான சிறிசேனா ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றது.

மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 16-ம்தேதி வரைக்கும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ரனில் விக்ரமசிங்கே கூறியிருந்தார்.

இதற்கிடையே நவம்பர் 5-ம்தேதி இலங்கை பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பான கூட்டம் நடைபெற இருந்தது. இப்போது நாடாளுமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் அந்த அலுவல்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்ற நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன சஸ்பெண்ட் செய்திருக்கிறார். அதே நேரம் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தனது அரசு இல்லத்தை காலி செய்ய மறுத்து வருவதால் சர்ச்சை நீடித்து வருகிறது.

.