This Article is From Feb 18, 2020

தள்ளாடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்; வங்கி கடனை திரும்பி செலுத்துமா? கவலையில் ஆர்பிஐ!

2,500 கோடியை இன்று இரவுக்குள் செலுத்துவதாகவும், வெள்ளிக்கிழமைக்குள் ரூ.1,000 கோடியை செலுத்துவுதாகவும் தெரிவித்த வோடாஃபோன் ஐடியாவின் முன்மொழிவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

New Delhi:

உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை ஏர்டெல் நிறுவனம் நேற்றைய தினம் செலுத்தியுள்ளது. வோடாஃபோன் ஐடியா மற்றும் டாடா நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் நிலுவைத் தொகையின் ஒரு பகுதியை செலுத்திவிட்டன. முன்னதாக, நீதிமன்ற உத்தரவை மதிக்காத நிறுவனங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. 

இதைத்தொடர்ந்து, மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடியை பாரதி ஏர்டெல் நிறுவனம் நேற்றைய தினம் வழங்கியது. வோடாஃபோன் ஐடியா மற்றும் டாடா நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் நிலுவைத் தொகையின் ஒரு பகுதியை செலுத்திவிட்டன. தொலைத்தொடர்பு துறைக்கு மொத்தம் ரூ.35,586 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய ஏர்டெல் நிறுவனம், அதில் ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்தியதை தொடர்ந்து, இன்னும் 25,586 கோடி செலுத்த வேண்டியுள்ளது. 

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் ரூ.53,000 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும். இதில், 2,500 கோடி செலுத்திய நிலையில் மீதம் ரூ.50,500 கோடி செலுத்த வேண்டும். டாடா நிறுவனம் மொத்தம் ரூ.13,800 கோடி செலுத்த வேண்டும். இந்த தொகைகளை செலுத்த மார்ச் 17ம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தொலைத் தொடர்புத்துறையானது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் என்ன நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து நான் தொலைத்தொடர்பு துறையிடம் இருந்த கேட்டு தெரிந்துக்கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு பணம் செலுத்த வேண்டிய அழுத்தத்தில் இருக்கும் நிலையில், அந்நிறுனங்கள் வங்கி கடன்களை எப்படி திரும்ப செலுத்தக்கூடும் என்ற மிகப்பெரிய கவலை ஆர்பிஐக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தற்போதைய நிலைமையை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும், சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு கடன் தொகையை செலுத்த முடியும் என்பதைப் பொறுத்து, அவர்களால் கடனை செலுத்த முடியுமென்றால், எப்போது அதனை செலுத்த முடியும் என்பது குறித்தும், இதனால், வங்கித் துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நாங்கள் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார். 

.