This Article is From Dec 13, 2019

’ரேப் இன் இந்தியா’ என்ற ராகுலின் கருத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி!

ஜார்கண்ட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ’ரேப் இன் இந்தியா’ என்று பேசிய ராகுலின் கருத்திற்கு ஸ்மிருதி இரானி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், வரலாற்றில் முதன்முறையாக இந்திய பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும் என்று ஒரு தலைவரே அழைப்பு விடுத்ததாக அவர் சாடினார்

’ரேப் இன் இந்தியா’ கருத்திற்காக ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும் என ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • அனைத்து ஆண்களும் பாலியல் வன்கொடுமையாளர்கள் கிடையாது என ஸ்மிருதி கருத்து
  • ’ரேப் இன் இந்தியா’ என்ற ராகுல் கருத்தை குறிப்பிட்டு அமளி
  • மக்களவையில் மற்ற பாஜக எம்.பிக்களும் கடும் அமளி
New Delhi:

அண்மையில் ஜார்கண்ட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் 'ரேப் இன் இந்தியா' என்று பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கருத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், வரலாற்றில் முதன்முறையாக இந்திய பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும் என்று ஒரு தலைவரே அழைப்பு விடுத்ததாக அவர் சாடினார். 

அனைத்து ஆண்களும் பாலியல் வன்கொடுமையாளர்கள் கிடையாது. இது இந்தியாவுக்கு பெரும் அவமானம், ராகுல் காந்திக்கு 50 வயதாகிறது. எனினும், அவரது இந்த கருத்து இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்க அழைப்பு விடுத்தது போல் இருப்பது என்பதை அவர் அறியவில்லை என்று அவர் சாடினார்.

தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, ராகுல் அவரது கருத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களையும் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறினார். 

"இதுபோன்ற கருத்துக்களை பேசும் நபர்களுக்கு இந்த அவையில் உறுப்பினராக இருக்க தார்மீக உரிமை இல்லை' என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 

இதனிடையே, பேசிய திமுக எம்.பி கனிமொழி, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் தொடர்பாக அரசுக்கு கேள்வி எழுப்பும் விதமாகவே ராகுல் காந்தி பேசியுள்ளார். பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். நம் பொருளாதாரம் உயர வேண்டும் என்பதில் மாற்று கருத்துகள் இல்லை. ஆனால், நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அதனையே ராகுல் குறிப்பிட்டு கூறியுள்ளார். 

முன்னதாக, நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார். அதில், நரேந்திர மோடி ‘மேக் இன் இந்தியா' என்று கூறுகிறார். ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும், ‘ரேப் இன் இந்தியாவாக' இருக்கிறது என்று விமர்சித்தார். 

உத்தர பிரதேசத்தில் நரேந்திர மோடி அரசின் எம்எல்ஏவால் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். பின் அந்த பெண் ஒரு விபத்தில் சிக்கினார். இது குறித்து ஒரு வார்த்தை கூட நரேந்திர மோடி பேசவில்லை. 

'மகள்களை காப்பாற்றுங்கள், மகள்களுக்கு கற்பியுங்கள்' என்று நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால், யாரிடம் இருந்து மகள்களை காப்பாற்ற வேண்டும் என்பதை அவர் கூறவில்லை. அவர்கள் பாஜக எம்.எல்.ஏக்களிடம் இருந்து தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.
 

rpr296u8

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கருத்திற்கு எதிராக பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். 


நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பின்னரே இந்த வார்த்தை போர் தொடங்கியது. 

ஐதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இதில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தபோது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றதால் அவர்களை என்கவுடன்டரில் தெலுங்கானா போலீசார் சுட்டுக்கொன்றனர். 

இந்த சம்பவம் நடந்த ஒரு சில நாட்களில், உத்தரபிரதேசம், உன்னாவோ மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக அந்த பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உட்பட 5 பேரால் அந்த பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார். 

.