This Article is From Jan 16, 2019

அரசு வருமானம் பெற மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? வைரமுத்து கேள்வி

10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூகநீதிக்கு எதிரானது.

அரசு வருமானம் பெற மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா? வைரமுத்து கேள்வி


தமிழக அரசு வருமானம் பெறுவதற்கு 20% மக்கள் போதையில் மயங்கி கிடக்க வேண்டுமா என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். 

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு, மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

இன்று கிராமத்தில் முதியவர்கள் இல்லை, 50 வயதுக்குள் மது பழக்கத்தினால் மாண்டு போகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது கிராமத்தில். தமிழர்களை மாய்த்துவிட்டு தமிழினத்தை எப்படி காப்பீர்கள்? இந்த கருத்தை நான் தமிழர்களின் குடும்பங்களின் சார்பில், தமிழ்நாட்டு பெண்களின் சார்பில், தமிழ்நாட்டு குழந்தைகளின் சார்பில் முன்வைக்கிறேன். 

தற்போது இருக்கும் அரசும், இனி வருகிற அரசும் மதுவை ஒழிப்பதற்காக அல்லது படிப்படியாக குறைப்பதற்கான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என அவர்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

தொடர்ந்து அவரிடம் பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பியபோது, உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு செய்தது, கால் நூற்றாண்டு வரை சமூக நீதிக்காக போராடிய தமிழ் தலைவர்களுக்கு பெரும் தோல்வி. 10% இடஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூகநீதிக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.

.