“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்!

"முதலில் எந்த வகையில் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்த Common Minimum Programme (CMP) பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும்"

Uddhav Thackeray - “காங்கிரஸும் நாங்களும் வித்தியாசமான கொள்களைகளைக் கொண்டவர்கள். ஆனால், எங்களால் சேர்ந்து வேலை செய்ய முடியும்"

New Delhi:

மகாராஷ்டிரத்தின் (Maharashtra) ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை (President's Rule) அமல் செய்ய பரிந்துரை செய்ததனின் பேரில், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து சிவசேனா, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மற்ற எதிர்க்கட்சிகள், இம்முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மாலைவாக்கில், சிவசேனா, எப்படியும் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அரியணையில் ஏறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்நிலையில், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, செய்தியாளர்கள் மத்தியில், இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை முடிந்துவிடவில்லை என்பதை உணர்த்தும் வகையில் பேசியுள்ளார். 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கூட்டு வைத்திருந்த பாஜக - சிவசேனா, அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியை முறித்துக் கொண்டன. தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவைக் கோரியது.

வரலாற்றில் முதன்முறையாக எதிர் துருவ கொள்கைகள் கொண்ட சிவசேனாவும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் நீட்சியாக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, சோனியா காந்தியிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி, ஆதரவு கோரினார். சோனியாவோ, நான் கட்சி பிரமுகர்களுடன் கலந்தோலிசித்து விட்டு மீண்டும் அழைக்கிறேன் என்று முடித்துக் கொண்டார். இதுவரையில் காங்கிரஸ், தனது நிலைப்பாடு குறித்து தெளிவாக சிவசேனாவுக்குத் தெரிவிக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே, “காங்கிரஸும் நாங்களும் வித்தியாசமான கொள்களைகளைக் கொண்டவர்கள். ஆனால், எங்களால் சேர்ந்து வேலை செய்ய முடியும். பாஜக-வைப் போல. பாஜக, காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் கூட்டணி வைத்தது. அதைப் போல தற்போதைய சூழலிலும் கூட்டணி வைக்க முடியும்,” என்றார்.

தொடர்ந்து பாஜக-வை விமர்சித்த தாக்கரே, “நிதிஷ் குமார், பஸ்வான், பிடிபி, நாயுடு உள்ளிட்டோர் எப்படி பாஜக-வுடன் கூட்டணி வைத்தனர். அனைவரும் வெவ்வேறு கொள்களைக் கொண்டவர்கள்தானே. எனவே, நாங்களும் ஆலோசனை செய்து கூட்டணி குறித்து முடிவெடுப்போம். 

முதலில் எந்த வகையில் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்த Common Minimum Programme (CMP) பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும். அதைச் செய்வோம்,” என்று உறுதி அளித்துள்ளார். 


 

More News